மதுரையில் பி.ஜே.பி.யின் மாநாடு ஒன்று நடைபெற்று இருக்கிறது. வாகனங்களை
ஏற்பாடு செய்து கொடுத்து, வருகின்றவர் களுக்கு வழிச் செலவு என்ற பெயரில்
கணிச மான அளவுக்குத் தொகையும் கொடுத்து, மூன்று வேளை தடபுடல்
விருந்துக்கும் ஏற்பாடு செய்து கூட்டப்பட்ட கூட்டம் என்பது - மிக
வெளிப்படையாகச் சந்தைக்கு வந்த செய்தி யாகும்.
மாநாட்டில் அப்படி என்ன புதுமை அறிவிப்பு என்றால், ஏடுகளே குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் இல்லை.
அத்வானிதான் மாநாட்டின் முக்கிய தலைவர். பழைய கதைகளை ஒப்புவித்து இருக்கிறார். தன்னம்பிக்கை இல்லாத மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது.
காங்கிரசை எதிர்த்து அகில இந்திய அளவில் ஜனதா அரசு அமைக்கப்பட்டது பற்றி நினை வூட்டியுள்ளார். அதனை அவர் நினைவூட்டாமல் இருந்தால், கொஞ்சம் மரியாதையாவது மிச்சப்பட்டு இருக்கும்.
ஜனதா கட்சி வெற்றி பெற்று மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு, ஜனதாவில் கரைய வேண்டிய இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.லும் உறுப்பினர்கள் என்பதைத் தொடர்ந்தனர். இத்தகைய இரட்டை உறுப்பினர் என்கிற இரட்டை நாக்கு அரசியல் கூடாது என்று பிரபல சோஷலிஸ்டான மதுலிமாயி பிரச்சினையைக் கிளப்ப, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை விட்டுக் கொடுக்க முடியாது; இந்துத்துவா என்ற எண்ணத்திலிருந்து விடுபட முடியாது என்று கூறியதால், அவர்கள் மறு படியும் ஜனசங்கத்துக்கே ஓட வேண்டியதாயிற்று. அப்படி உண்டான மறு அவதாரம்தான் இன்றைய பாரதிய ஜனதா கட்சி.
சுருக்கென்று குறிப்பிட வேண்டுமேயானால், இந்து வெறித்தனம் - பார்ப்பனிய வருணா சிரமம் என்ற கட்டிலிருந்து விடுபட முடியாதவர்கள் இவர்கள். இந்தியாவின் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்திய அரசமைப்புக்குள் அவர்கள் அரசியலில் உயிரை வைத்துக் கொள்வது என்பதே முடியாத ஒன்றாகும். மதச்சார்பின்மை கொள்கைப்படி நடப்பதாக இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு பொய்யாகச் சத்தியம் செய்வது எந்த வகையில் ஆரோக்கியமானது? இவ்வளவுக்கும் தார்மீக நெறியைப் பற்றி உரக்கக் கத்துபவர்களின் யோக்கியதை இந்தத் தரத்தில்தான் உள்ளது.
தமிழ்நாடு, மற்றும் இந்திய அளவில் ஆட்சியை பிடிக்கப் போகிறார்களாம்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், கட்டிய பணத்தை பி.ஜே.பி. வேட்பாளர் எவரும் திரும்பிப் பெற முடியாத பரிதாப நிலை!
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசியலை, ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்களாம். தென் மாநிலத்தில் பிடித்த கருநாடக ஆட்சியே கும்பி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. தென் மாநிலத்தில், கையில் கிடைத்ததையும் இழக்கப் போகிறார்கள்.
மீதி வடமாநிலங்களிலும் பி.ஜே.பி.க்குள் குத்து வெட்டு களேபரமாக நடந்து கொண்டிருக்கிறது. யார் பிரதமருக்கான வேட்பாளர் என்பதிலும் ஒரே குழப்பம்.
நரேந்திர மோடியை முன்னிறுத்த முயற்சிகள் நடந்தன். அண்மையில் வழக்குகள் பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் அவர் தேர்தலில் போட்டிபோட முடியுமா என்ற வினாவை எழுப்பியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான தீர்ப்பு வந்தால் அத்வானிகளே தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியாது.
எல்லா வகையிலும் வீழ்ச்சி எனும் பள்ளத்தில் தாமரை விழுந்துவிட்டது. இந்தத் தன்மையில் சவால்கள் என்பதெல்லாம் வெத்து வேட்டுகள் தான்!
No comments:
Post a Comment