அன்புள்ள தமிழக அரசியல் ஆசிரியருக்கு,
மரித்துப்போன எனது சகோதரன் பசுபதி பாண்டியன் தான் முதன் முதலில் நான் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டபோது திருநெல்வேலியில் ஒரு பெரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் இனத்திலிருந்து நீக்கி தமிழக அரசியல்வாதிகளின் ஏமாற்றுகளிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என அவர் நடத்திய இயக்கத்திற்கு நான் ஆதரவு கொடுத்து ஆகஸ்டு 2009ல் திருநெல்வேலியில் ஒரு கருத்தாலோசனைக் கூட்டமும் நடத்தினோம்.
சகோதரன் பசுபதி பாண்டியன் இறப்பு தேவந்திர குல இனத்திற்கு ஒரு பெரிய இழப்புதான். அவருக்கு நன்றியுன் கூடிய மரியாதை செலுத்தத்தான் நான் தூத்துக்குடி சென்று அவர் உடலுக்கு மாலை மரியாதை செய்தேன். மேலும் என் இனத்தவர்கள் கலவரத்தில் ஈடுபடக்கூடாது மற்றும் பழி வாங்க முயற்சிக்கக் கூடாது என்று அறிவுறை கூற விரும்பினேன். எனவே அவர் உடல் வரும் வரை மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தவர்களுடன் பேசி இந்த இனம் இனி சட்டத்தைத் தன் கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறை கொடுத்துக் கொண்டிருந்தேன். அங்கு எந்த விதப் பதட்டமும் எப்போதும் இல்லை. எந்தப் போலீசும் இல்லாமல் அங்கிருந்தவர்களுடன் சுமூகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். இதுதான் உண்மை. (நான் போகுமிடங்களில் ரகசிய போலீஸ் நோட்டம் விடுவதற்காக நிற்பார்கள், ஆனால் சாதாரண உடையில். இவர்கள் வருவது என்னைப் பாதுகாக்க அல்ல. நோட்டம் விடுவதற்காகவே)
நான் தனியாகத்தான் இத்தனை வருடங்களாக வாகனம் ஓட்டுகிறேன். ஓட்டுனர் வைத்துக்கொள்வது கிடையாது. பணிநீக்க காலத்திலும் இதேபோல்தான் வாகனம் ஓட்டினேன், இடங்களுக்குச் சென்று வந்தோம். எனக்கோ வீட்டிற்கோ இதுவரை மாநில போலீசின் பாதுகாப்பை நான் கோரவில்லை. ஊழலுக்கு எதிராக நான் வழக்குத் தொடுத்தபோது அரசியல் கட்சிகள் எனக்குப் பாதுகாப்புத் தருகிறேன் என்று கூற அதை நான் நிராகரித்துள்ளேன். இப்போது கிறிஸ்து இயேசுவின் சீடராக மாறியபின் எனக்கு தெய்வீகப் பாதுகாப்பு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை.
நிற்க. 2012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினையிலிருந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல். என்னுடைய சொந்த வாகனத்தில் விடுமுறை நாட்களில் செல்கிறேன் அல்லது விடுப்பு எடுத்துச் செல்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
என்னை எப்படியாவது ஐ ஏ எஸ் பணியிலிந்து நீக்கி விடத் துடிக்கும் சில ஆதிக்க சக்திகள் இது போன்ற பொய் வதந்திகளைப் பரப்ப முயலுகின்றன. முடிவில் உண்மை மட்டுமே வெல்லும்.
தங்கள் வெளியீட்டில் உண்மைக்கு மாறாக தகவல்கள் வந்துள்ளமையாலும் அது என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் எற்படுத்தியுள்ளமையாலும் தயவு செய்து இந்த மறுப்புச் செய்தியை வரும் இதழில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அன்புடன்
செ உமாசங்கர் IAS.,
Commissioner for Disciplinary Proceedings
செ உமாசங்கர் IAS.,
Commissioner for Disciplinary Proceedings
No comments:
Post a Comment