Friday, March 2, 2012

சுந்தரலிங்கத் தேவேந்திரர்




பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக.

கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர்.

முன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும்

ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்)

சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்.

இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார்.

அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்தவியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர்.

புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது.

ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள்.

ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது.

போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம்என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மாஎன்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார்.

உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.

இப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது.

வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார்.

பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.

பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்றுமேற்குலஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை.

கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம்

மட்டிலா பேரும் கொடுத்தானடா

ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு

நீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது


நன்றி: தமிழக அரசியல்

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget