ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரனின் 57வது குருபூஜை நடக்கிறது.
இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் சுந்தர்ராஜ், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் மக்களவை உறுப்பினர் அன்பகராஜா உள்ளிட்டோர் மலராஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுபதங்கவேலன், தமிழரசி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம்பிரபு, மதிமுக சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் அழகு சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ சதர்ன் திருமலைகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுதினர். இதேபோல் இமானுவேல் சேகரனின் மகள் ஜான்சி ராணி, பேத்தி கெலன், பேரன்கள் கோமகன், சந்திரசேகரன் ஆகியோர் மலராஞ்சலி செலுத்தினார்கள்.
குருபூஜையை தொடர்ந்து பரமக்குடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரன் நினைவிடம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்பட 40 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, அதன்மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கப்படுகிறது. மேலும், மூன்று வகையான ஆளில்லா விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment