Friday, July 13, 2012

கைது செய்வது குறித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்


கைது செய்வது மனித உரிமைகளின் அடிப்படையான சுதந்திரத்தில் தலையிடுகிறது. இந்திய அரசியல் சட்டம் மட்டுமல்ல, சர்வதேச மனித உரிமைகள் சட்டமும் கூட, மாநில அரசு, சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் தன்னுடைய அடிப்படைப் பணியில் எந்த ஒருவரையும் கைது செய்யும் அதிகாரத்தை அங்கீகரிக்கிறது. நியாயமான, நேர்மையான, உண்மையான சட்ட முறைகளின்படி மட்டுமே இச்சுதந்திர பறிப்பை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் 22(1)-ன்படி கைது செய்யப்படும் எல்லா நபருக்கும், எந்த அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் என்பதை கைது செய்யப்பட்டவுடன் தெரிவிக்க வேண்டும். கைதானவரின் விருப்பத்திற்கு இணங்க வழக்குரைஞரை கலந்து ஆலோசிக்கும் உரிமையையோ, அவர் மூலம் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையையோ மறுக்கக் கூடாது. 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50-ன்படி, ஒருவரைக் கைது செய்யும் போலீஸ் அலுவலர், உடனடியாக, அவர் கைது செய்யப்படுவதற்கான குற்றத்தின் முழு விபரங்களையும் அல்லது கைதுக்கான அடிப்படைக் காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். இத்தேவைகள் மீறப்படும்போதே கடைப்பிடிக்கப்படுவதாக உள்ளது.




அரசியல் சட்டம் பிரிவு 22(2) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 57 இவற்றின்படி கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தின் சட்ட முறைப்படி கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டும் என்பது சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. மனித உரிமை மீறல்களில் கைது செய்தல் மற்றும் போலீஸ் நிலைய காவலில் வைக்கும்போது போலீசின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக நிறையப் புகார்கள் உள்ளன. குறிப்பாக, சட்டத்திற்கும். நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கின்ற வகையிலே, சட்ட ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பதற்காக சரியாக புலன் விசாரணை செய்யும் போலீசாரின் அதிகாரங்களைக் குறைக்காமலேயே கைது செய்வதில் வழிகாட்டும் நெறிகளை வரையறுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

 
கைது செய்வதற்கு முன்னர்
  • புகாரின் நம்பகத்தன்மை, யார் மீது புகார் செய்யப்பட்டுள்ளதோ அவருக்கு குற்றத்தில் பங்கு மற்றும் கைது செய்ய வேண்டியதன் அவசியம். இவற்றினை விசாரணைக்குப் பின்னர், முழு திருப்தியுடன் அறிந்ததும், பிடியாணை இல்லாமல் கைது செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் (ஜோகிந்தர் குமார் வழக்கு 1994-4- உச்சநீதிமன்ற வழக்கு 260) 
  • நீதிமன்றங்களில் தொடரக் கூடிய வழக்குகளில் சட்டப்படி பிடியாணை இல்லாமல் கைது செய்ய அதிகாரம் உள்ளது என்பதால் மட்டுமே கைது செய்வதை நியாயப்படுத்த முடியாது.
  • ஜோகீந்தர் குமார் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர், கைது செய்யும் அதிகாரம் சரியான முறையில் கையாளப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நியாயப்படுத்த வேண்டும்.
  • நீதிமன்றங்கள் தொடரக் கூடிய வழக்குகளில் கீழ்க்குறிப்பிடும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூழல்களில் கைதை நியாயப்படுத்தலாம்.
  • கொலை, கலகம் விளைவித்தல். திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற மிகக் கடுமையான குற்றங்களில் குற்றவாளியென சந்தேகிக்கப்படுபவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து அல்லது மறைந்து விடுவார் என்றால் அவரை கைது செய்வது அவசியம்.
  • சந்தேகத்துக்கு உள்ளானவர் கொடூரமான நடத்தையாளர், அவர் மீண்டும் குற்றங்கள் செய்வார் என்றாலும் கைது செய்யலாம்.
  • சந்தேகத்துக்கு உள்ளானவர். சாட்சியங்களை அழித்து விடுவார் அல்லது சாட்சிகளை கலைத்து விடுவார் அல்லது சந்தேகத்துக்குள்ளான கைதாகாத மற்றவர்களை எச்சரித்து விடுவார் என்றாலும் கைது செய்யலாம்.
  • சந்தேகத்துக்கு உள்ளானவர் வழக்கமான குற்றவாளி, கைது செய்யப்படாவிட்டால் இதே போன்று அல்லது வேறு குற்றங்களை அவர் செய்வார் என்றாலும் கைது செய்யலாம். (தேசிய போலீஸ் ஆணையத்தின் மூன்றாவது அறிக்கை)
  • மேலே குறிப்பிட்ட மிகக் கொடிய வழக்குகளைத் தவிர, போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட நபருக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து அனுமதி இல்லாமல் வெளியே போகக் கூடாது என நோட்டீஸ் அனுப்பி, கைதினைத் தவிர்க்கலாம்.
  • சந்தேகப்படுபவர்களை தலைமறைவாகி விடுவார்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களுக்கு கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். 
  • கைது அல்லது விசாரணைக்குச் செல்லும் போலீஸ் அலுவலர்கள் தங்களின் பெயர் மற்றும் பதவி அட்டையுடன். சரியான அடையாளத்துடன் சென்று செயல்பட வேண்டும். காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளில் கைது மற்றும் விசாரணையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர்கள் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.




    கைது

  • கைது செய்யும் பொழுது பலாத்காரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதை ஒரு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும் கைது செய்வதைத் தடுக்க எதிர்ப்பு காட்டினால், அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள குறைந்த பட்ச வலிமையைப் பயன்படுத்தலாம். கைது செய்யப்படுபவருக்கு வெளிப்படையாகவோ, வேறு வகையிலோ காயங்கள் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.
  • கைது செய்யப்படுபவரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். கைதுக்குப்பின் ஊர்வலமாக நடத்திச் செல்வதோ, அவரை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப் பொருளாக்குவதோ எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது.
  • கைது செய்யப்படுபவரின் அந்தரங்க உரிமையை மதித்து, பலாத்காரமின்றியும், ஆவேசமின்றியும், அவரது கண்ணியத்தை மதித்து, அவரைக் கைது செய்திடுவதற்காக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பெண்களை நாகரீகமான முறையில் பெண் போலீசார்தான் பரிசோதனை செய்ய வேண்டும். (பிரிவு 51 (2) குற்றவியல் நடைமுறைச் சட்டம்)
  • கை விலங்கிடுவதோ, கால் விலங்கிடுவதோ கூடாது. அப்படிச் செய்யும் அவசியம் ஏற்பட்டால், பிரேம்சங்கர் சுக்லா எதிர் டில்லி நிர்வாகம் (1980 3 உச்சநீதிமன்ற வழக்கு 526) மற்றும் ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு எதிர் அஸ்ஸாம் மாநில அரசு (1995 3 உச்சநீதிமன்ற வழக்கு 743) வழக்குகளில் உச்சநீதிமன்றம் விளக்கியுள்ள நடைமுறைப்படியே செய்யப்பட வேண்டும்.
  • பெண்களைக் கைது செய்யும் பொழுது, இயன்றவரை பெண் போலீசாரை கைது நடவடிக்கையின் போது உடனிருக்க வேண்டும். சூரியன் மறைந்து பின் சூரியன் உதயம் ஆகும் கால இடைவெளியில் பெண்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகள் மற்றும் வளர் இளைஞர்களை (Juveniles) கைது செய்யும் பொழுது பலாத்காரத்தை பயன்படுத்தவோ, அடிப்பதோ கூடாது. போலீஸ் அலுவலர்கள், குழந்தைகள் அல்லது வளர் இளைஞர்களை கைது செய்கையில் சமூகத்தில் மதிப்பிற்குரிய நபர்கள் உடனிருக்க வேண்டும். இதனால், இவர்கள் அச்சுறுத்தப்படுவது தவிர்க்கப்படலாம். குறைந்த அளவு பலாத்காரமே பயன்படுத்தப்படும்.
  • பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படும் பொழுது, கைதாகுபவருக்குப் புரிகின்ற மொழியில் கைதுக்கான காரணங்களை உடனடியாக விளக்கிட வேண்டும். இந்த நோக்கத்திற்காகப் போலீசார் தேவைப்பட்டால் சமூகத்தில் மதிப்பிற்குரிய நபர்களின் உதவியைப் பயன்படுத்தலாம். கைதுக்கான காரணங்கள் போலீஸ் பதிவேடுகளில் எழுத்து மூலம் பதிவாகியிருக்க வேண்டும். கைதான நபரிடம் பதிவேட்டில் உள்ள தகவலைக் காட்டுவதுடன், அவர் வேண்டினால் அதன் நகலையும் தர வேண்டும்.
  • கைதான நபர் தேவையென்று வேண்டுகோள் விடுத்தால் அவருடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது தெரிந்தவருக்கு அவர் கைது செய்யப்பட்ட தகவலையும். காவலில் வைக்கப்பட்டதையும் தெரிவிக்க வேண்டும். யாருக்குத் தெரிவித்தார்களோ, அந்த நபர் குறித்த தகவல்களையும் பதிவேடுகளில் பதிவாக்கிட வேண்டும். (மேலே குறிப்பிட்ட ஜோகீந்தர் குமார் வழக்கு)
  • பிணையில் விடக்கூடிய குற்றத்திற்காகக் கைது செய்யப்படும் ஒருவரை கைது செய்தால், போலீஸ் அதிகாரி அந்த நபருக்கு அவரின் பிணையில் வெளிவருவதற்கான உரிமை குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போதே அவர் தனக்கான ஜாமீன்தாரரை ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.
  • கைதானவரின் இந்த உரிமைகளைச் சொல்வதுடன், போலீசார் அவர் விருப்பப்பட்ட வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவோ. பாதுகாப்புப் பெறவோ அவருக்கு உரிமைகள் உண்டு என்பதையும் தெரியப்படுத்திட வேண்டும். அவருக்கு அரசு செலவில் இலவச சட்ட உதவி பெறவும் உரிமை உள்ளதைத் தெரிவிக்க வேண்டும். (டி.கே.பாசு வழக்கு (1999) 1 உச்சநீதிமன்ற வழக்கு)
  • கைது செய்யப்பட்டவர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரும் பொழுது, அவர் விரும்பி வேண்டினால் சரியான மருத்துவ உதவி தரப்படவேண்டும். அதற்கான உரிமை அவருக்கு உண்டு என்பதைத் தெரிவிக்க வேண்டும். கைதானவர் பெண்ணாக இருந்தால் அவர் பதிவு செய்த பெண் மருத்துவரால் மட்டுமே பரிசோதிக்கப்பட வேண்டும். மருத்துவ உதவி பெற்றிட வேண்டும். (பிரிவு 53 குற்றவியல் நடைமுறைச் சட்டம்)
  • கைதானது மற்றும் காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல், கைது செய்த போலீஸ் அதிகாரியால் உடனடியாக மாவட்ட, மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிட வேண்டும். 24 மணி நேரமும் இந்தத் தகவல்களை பெறும் கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்பட வேண்டும்.
  • ஒரு நபர் கைதானவுடன், கைதானவரின் உடலில் காயங்கள் உள்ளனவா? இல்லையா? என்பதை கைதை செயல்படுத்திய போலீஸ் அதிகாரி கைதுப் பதிவேடுகளில் குறிப்பிட வேண்டும். கைதானவரிடம் காயங்கள் காணப்பட்டால், காயங்களின் முழுமையான விவரிப்பும் காயங்களுக்கான காரணங்களும் பதிவேடுகளில் குறிப்பிடப்பட வேண்டும். அக்குறிப்பில் காவல் அதிகாரியும், கைதானவரும் கையொப்பமிட வேண்டும். கைதானவர் விடுவிக்கப்படும் பொழுது இது குறித்த சான்றிதழ் காவல் அதிகாரியின் கையொப்பத்துடன் கைதானவருக்கு கொடுக்கப்பட வேண்டும்.
  • நீதிமன்ற உத்தரவின்படி கைதானவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டால். காவலில் உள்ள 48 மணி நேரத்திற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச மருத்துவ சேவைத்துறை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் குழு மருத்துவரால் கைதானவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்படும் பொழுது, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் உடலில் காயங்கள் உள்ளனவா? இல்லையா? என்று குறிப்பிட்டு அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.




      
    கைதுக்குப் பின்னர்

  • கைது செய்யப்பட்டவர் உரிய நீதிமன்றத்தில் கைதான 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்தப்பட வேண்டும். (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 56 மற்றும் 57)
  • விசாரணையின் போது எந்நேரத்திலும் கைது செய்யப்பட்டவர் அவருடைய வழக்குரைஞரைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
  • விசாரணைக்காக அரசு அறிவித்துள்ள, எளிதில் அடையாளம் காணக்கூடிய இடங்களில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். அது எளிதில் சென்று அடையக்கூடிய இடமாக இருக்க வேண்டும். எங்கு விசாரணை நடைபெறுகின்றது என்பதை கைதானவரின் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அவசியம் தெரியப்படுத்திட வேண்டும்.
  • விசாரணை முறையானது அங்கீகரிக்கப்பட்டுள்ள உயிர் வாழும் உரிமை கண்ணியமாக, சுதந்திரமாக நடத்தப்படுவதற்கான உரிமை மற்றும் சித்ரவதை மற்றும் கீழ்த்தரமான நடத்தப்படுவதற்கெதிரான உரிமை ஆகியவற்றுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்.

 
வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துதல்
  • இவ்வழிக்காட்டுதல்கள் கூடுமானவரை எவ்வளவு மொழிகளில் மொழியாக்கம் செய்ய முடியுமோ அவ்வாறு செய்து எல்லா காவல் நிலையங்களுக்கும் தரப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் சிறு கையேடுகளாக ஒவ்வொரு போலீசாருக்கும் வழங்கப்பட வேண்டும்.
  • இந்த வழிமுறைகள் அச்சு மற்றும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக அதிக அளவில் பரப்பப்பட வேண்டும். எல்லா காவல் நிலையங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் இவ்வழிகாட்டுதல்கள் அறிவிப்புப் பலகையில் எடுப்பானதாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
  • இந்த வழிகாட்டுதல்களை மீறப்படுவது குறித்து, விசாரித்து குறைபாடுகள் நிவர்த்தி செய்து முறையான நடவடிக்கை எடுக்கும் அமைப்புகளை (Redressal Cells) காவல்துறை ஏற்படுத்திட வேண்டும்.
  • வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டுள்ள காட்சிப்படுத்தும் அறிவிப்புப் பலகையிலே புகார்களின் மீது குறை தீர்க்கும் அமைப்பு எங்குள்ளது? எவ்வாறு அணுகலாம்? என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.
  • அரசு சாரா நிறுவனங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள். பல்கலைக்கழகங்கள் இன்ன பிற அமைப்புகள் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை பரவலான தளத்தில் எடுத்துச் சென்று மக்களை அடைந்திட தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • வழிகாட்டுதல்களை மீறிய காவல் அதிகாரி மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போலீஸ்துறை சார்ந்த விசாரணை நடவடிக்கையாக மட்டுமின்றி, குற்றவியல் நீதி அமைப்புகளையும் நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதாக அமைய வேண்டும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனில் போலீஸ் அதிகாரிக்கு இவை குறித்து உணர்த்துதலும், பயிற்சியும் அவசியம்.



No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget