கடந்த 1991ம் ஆண்டு முதல், உத்திரபிரதேச மாநிலத்தில், அரசு ஊழியர்களின் பணிமூப்பு விதிமுறையின் படி SC, ST, OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “நியாயப்படுத்துவதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க முடியும். அப்படி எதுவும் காட்டப்படாததால், இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கும் விதிமுறையானது நீக்கறவு செய்யப்படுகிறது’’ என உச்ச நீதிமன்றம், கடந்த 28.04.12 அன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தீர்ப்பிட்டுள்ளது.
மண்டல் வழக்கு:
20.12.1978 அன்று அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ‘பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்’ என்பவர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினரை உள்ளடக்கிய, ‘பிற்படுத்தபட்டோர் குறித்த விபரங்களை சேகரிக்கும் வகையிலான ஆணையம்’ அமைப்பது குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த ஆணையம் 12.12.1980ல், இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தங்களது அறிக்கையை சமர்பித்தது. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வலுக்கவே, தொடர்ந்து வந்த அரசுகள் அந்த அறிக்கையை அமலாக்காமல் இருந்தன.
1991ம் ஆண்டு வி.பி. சிங் தலைமையிலான அரசு, மண்டல் பரிந்துரையை சில மாற்றங்களுடன் நடைமுறைபடுத்த முன்வந்தது. அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ‘மண்டல் ஆணையம் வழக்கு’ என குறிப்பாக அழைக்கப்படும், ‘இந்திரா சாவ்னி -எதிர்- இந்திய அரசு’ எனும் அந்த வழக்கில் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 பேர் கொண்ட விசாரணை குழு 16.11.1992 அன்று தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பில், இட ஒதுக்கீடானது, பணி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும், பதவி உயர்வுக்கு பொருந்தாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தீர்ப்பானது சமூக தளத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்தில் புதிதாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்திய அரசியல் சாசனத்தில், பணிகள் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான பிரிவுகள்:
சரத்து 16. பொது
பணிகளில் சம வாய்ப்பு:
(1): அரசின் கீழுள்ள எத்தகைய அலுவல்களில் நியமிக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும்.
4: அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்று காரணம் காட்டி, அத்தகைய தரப்பினருக்கு ஒரு சில பணிகளை அல்லது நியமனங்களை அரசு ஒதுக்கீடு செய்வதை இந்த கோட்பாடு தடை செய்யமுடியாது.
77வது (இந்திய அரசியல் சாசன) திருத்தம்,1995:
சரத்து 16. (4A):
அரசின் கருத்துப்படி, அரசுப் பணிகளில் போதிய அளவிற்கு பிரதிநிதித்துவ படுத்தப்படாத, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்குச் சாதகமாக, அப்பணிகளில் எந்த வகுப்பு அல்லது வகுப்புகளைச் சேர்ந்த பதவிகளுக்கும், பணி மூப்புடன் கூடிய பதவி உயர்வு தொடர்பான விசயங்களில், இடஒதுக்கீடு செய்வதிலிருந்து அரசை இந்த சரத்தில் உள்ள எதுவும் தடுக்காது.
இந்த திருத்தமானது,
17.06.1995 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உச்ச
நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு:
பதவி உயர்வில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மேற்கண்ட அரசியல் சாசன திருத்தமானது செல்லாது என அறிவிக்ககோரி, தொடரப்பட்ட நாகராஜ் –எதிர்- இந்திய அரசு எனும் வழக்கில், 2006ம் ஆண்டு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு ஆயம் மேற்படி திருத்தமானது செல்லுதன்மை கொண்டது என்று கூறியதோடு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்த மேற்கண்ட சட்ட திருத்தங்களையும் உறுதிசெய்தது. இதே கருத்தை இந்திய அரசு- எதிர்- புஷ்பராணி எனும் வழக்கில் 2008ம் ஆண்டில் மீண்டும் உறுதிசெய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் ஆயம், கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம், விவேகானந்தன்- எதிர்- பன்னீர் செல்வம் என்ற வழக்கில், பதவி உயர்வில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது செல்லும் என்று விரிவாக விவாதித்து தீர்ப்பிட்டுள்ளது.
இவ்வளவுக்கும் பிறகே, சமீபத்தில் உச்ச நீதிமன்றமானது, இயற்கை நீதிக்குப் புறம்பாக மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ‘பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இது தொடர்பாக விளக்கம் கேட்க நடுவணரசு, விரைவாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவேண்டும்’ என தீர்ப்பு வெளியான மறுநாளே (30.04.12) மக்களவையில் அதன் உறுப்பினர்களால் கோரப்பட்டபோது, “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என நடுவணரசின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை தொடர்ந்து நிலவசெய்திடும் வகையில் நடுவணரசை வலியுறுத்தி, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை நீடிக்க செய்வதில், அதன் பலனை அனுபக்கவிருக்கும் பணியாளர்களுக்கும், ஆட்சியாளர்களும் மட்டுமின்றி சமூக நலனில் அக்கறைகொண்ட அனைத்து தரப்பினருக்கும் பெரும்பங்கு உள்ளது.
No comments:
Post a Comment