இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கான தமிழக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தி அவரை போர்க் குற்றவாளியாக அறிவித்து கைது செய்யவேண்டும், தமிழர்களின் போராட்டத்தை அவமதிக்காமல் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் காதிகிராப்ட் அருகே அரை நிர்வாண போராட்டம் நடந்தது.
இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மேல்சட்டையை கழற்றி மத்திய அரசு மற்றும் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் திருச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சண்முகசுதாகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசு வாய்மூடி மவுனம் காத்து வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் போராட்டம் ஒன்றுபட்டு இல்லாமல் பிளவுபட்டு நிற்பதுதான்.
அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த பிரச்சினையில் ஓரணியில் திரள வேண்டும். மாணவர்களின் போராட்டத்துக்கு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கவேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
மாணவர்களின் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கக் கூடாது. 7 கோடி தமிழர்களும் ஒன்று திரண்டு மாணவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தை காப்பாற்ற முடியும். ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள 21-ந் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் அனைத்து தமிழர்களின் சார்பிலும் பொது பந்த் நடத்தப்பட வேண்டும்.
இலங்கை தான் செய்த போர்க் குற்றங்களை மறைப்பதற்காக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதுவும் இந்திய அரசு சொல்லிக்கொடுத்து நடத்தப்படும் நாடகம் ஆகும். இதனை தமிழக மீனவர்களும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment