Tuesday, August 7, 2012

வன்மையாக கண்டிக்கிறோம்

மதுரை அருகே அம்பேத்கார் - இமானுவேல்சேகரன் சிலைகள் உடைப்பு


 மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் வழியில் அம்பேத்கார் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். அதேபோல பெருங்குடி அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள இமானுவேல்சேகரன், அம்பேத்கார் சிலைகளையும் நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டு தப்பி விட்டனர்.

இன்று காலை 2 இடங்களில் அம்பேத்கார் சிலை, இமானுவேல்சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

சிலைகள் சேதப்படுத்தப்பட்ட செய்தி அவனியாபுரம், பெருங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு தீ போல பரவியது. இதனால் நேரம் ஆக ஆக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது.

காலை 6 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தியோரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெருங்குடி ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டது.

இதனால் பஸ் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அதேபோல சின்ன உடைப்பு கிராமத்திலும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது. சிலை உடைப்பு மற்றும் பஸ் மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யும்வரை நாங்கள் மறியலில் ஈடுபடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மதுரைக்கு வரும் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.

போலீசார் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் நடுரோட்டில் முட்கள், மரங்களை போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது. 



No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget