பாரத ரத்னா விருது இனி எத்துறை வல்லுநருக்கும் வழங்கப்படலாம் என்று விதிகளைத் தளர்த்திவிட்ட பின்னர் அந்த விருது இன்னின்னாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆங்காங்கே குரல்களும் கோரிக்'கை'களும் உயரத் தொடங்கியுள்ளன.
அதே சமயம் இத்தகைய விருதுகளை வேண்டாம் என்று புறந்தள்ளிய பெருமக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு பட்டியல் இது.
பட்டியலில் முதலாமவர்:
1. அபுல் கலாம் ஆஸாத். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர். ஐ ஐ டி போன்ற இந்தியக் கல்வித் தரக் குறியீடுகளைத் தொடங்கிய பெரும் சாதனையாளர். அவருக்கு அப்போது பாரத ரத்னா அளிக்கப்பட்டபோது, தார்மீக எண்ணத்துடன், அரசில் 'விருதுப் பட்டியலைத் தயாரிக்கும் இடத்தில் இருக்கும் தான் விருது பெறத் தகுதியற்றவன்' என்று கூறி மறுத்துவிட்டார். ஆனால், அவர் எதிர்ப்பு தெரிவிக்க இயலாத நிலையில் (அதாவது, அவரது மரணத்திற்குப் பின்னர்) 1992 ல் மீண்டும் அவருக்கு இந்த பாரதரத்னாவை கொடுத்தே விட்டார்கள்.
2. ரொமிலா தாப்பர் (சரித்திர ஆய்வாளர்) 1992லும் 2005லுமாக இரண்டு முறை பத்ம விபூஷணை மறுத்த ரொமிலா தாப்பர் சொன்ன காரணம் : 'கல்வியியலாளர்களே எனக்கு விருது அளிக்கத் தகுதியானவர்கள்; குறைந்த பட்சம் என் துறையில் பணி சிறந்தவர்களாகவாவது அவர்கள் இருக்கவேண்டும்'
3.டட்டோபந்த் தெங்கிடி (சமூகப் பிரமுகர்) 2003ல் பத்ம பூஷணை மறுத்து அவர் சொன்ன காரணம் "என் தலைவர்கள் ஹெட்கேவர், குருஜி கோல்வால்கர் ஆகியோருக்கு பாரதரத்னா கிடைக்காத வரை இதை என்னால் ஏற்க இயலாது" (நல்லவேளை, கோட்சேவுக்கும் பாரதரத்னா கேட்காமல் விட்டார்)
4. உஸ்தாத் விலாயத் கான் (சிதார் இசைமேதை) பத்மஸ்ரீ(1964), பத்ம விபூஷண் (1968) விருதுகளை மறுத்து அவர் சொன்னகாரணம்: "என் இசையை மதிப்பிட இந்தத் தேர்வுக் கமிட்டிக்குத் தகுதியில்லை"
5. ரத்தன் தியாம் (கலைஞர்) 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீயை நிராகரித்த ரத்தன் இப்படிச் சொன்னார்: "வடகிழக்கில் (நாகாலாந்தில்) மரணங்களுக்கும், காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் வித்திடுகிற அரசின் முடிவால், ரத்தம் கசியும் இதயத்துடன் இவ்விருதைப் புறக்கணிக்கிறேன்."
6. நிகில் சக்கரவர்த்தி (ஊடகவியலாளர்) 1990ல் பத்மபூஷண் விருதை நிராகரித்த நிகில் சொன்னார்: "ஊடகத்துறையினருக்கு இந்த விருது வழங்கப்படுவது பொருத்தம் இல்லை என்று கருதுகிறேன்"
7. சுகுமார் அழிக்கோடு (மலையாள எழுத்தாளர்) 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மறுத்த சுகுமார் "இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று காரணம் கூறினார்.
8. குஷ்வந்த்சிங் (எழுத்தாளர்) 1984ல் பத்ம பூஷண் விருது பெற்ற குஷ்வந்த், பொற்கோயிலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை எதிர்த்து அதனைத் திருப்பியளித்தார். ஆயினும், 2007ல் பத்ம விபூஷண் பெற்றார்.
9. கே. சுப்ரமணியம் (பாதுகாப்பு ஆலோசகர்) 1999ல் பத்ம பூஷணை மறுத்தவர் சொன்னது 1990 -ல் நிகில் சொன்ன அதே காரணம்.
10. கனக்சென் தேகா (அஸ்ஸாமிய எழுத்தாளர்) 2005ல் பத்ம ஸ்ரீயை மறுத்த தேகா சொன்னது : "இந்த விருதை ஏற்றால், அஸ்ஸாமியமக்களின் அன்பும் மதிப்பும் எனக்குக் குறைந்துவிடும்"
11. சிதாரா தேவி (கதக் கலைஞர்) 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷணை மறுத்த சிதாரா இப்படிக் கூறினார்: "பாரத ரத்னாவுக்கு குறைந்த விருதை ஏற்க மாட்டேன். - தகுதி குறைந்தவர்களெல்லாம் பத்ம விருதுகளைப் பெறுகிற நிலையில் நானும் அதைப் பெற மாட்டேன்"
12. எஸ்.ஜானகி (திரைப்பாடகி) 2012 ஆம் ஆண்டு பத்ம பூஷணை மறுத்துத் தள்ளிய ஜானகி அம்மையார் "தென்னிந்திய கலைஞர்களிடம் இந்திய அரசு ஓரவஞ்சனை பாராட்டுகிறது. ஆகவே, இந்திய அரசின் இவ்விருதை நான் புறக்கணிக்கிறேன்" என்றார்.
No comments:
Post a Comment