Friday, January 31, 2014

கைது குறித்து உச்சநீதிமன்றத்தின் 11 கட்டளைகள்

"கைது" என்ற சொல் கைது செய்தல் அல்லது தடுத்தல் அல்லது ஒருவரின் சுயசுதந்திரத்தை பறித்தல் என்று பொருள்களில் கையாளப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் சுதந்திரம் தடைபட ஆரம்பிக்கும் போதே கைது நடவடிக்கை தொடங்கி விடுகின்றது.

ஆரம்பக் காலங்களில் ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களுக்குக் கூட கைவிலங்கு மாட்டுவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல விலங்கு மாட்டி வீதி வீதியாக அழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்வர். இது போன்ற செயல்களை வன்மையாக கண்டித்த உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்  இது தொடரக்கூடாது என்றும், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், காவல்துறையின் பிடியில் இருந்து தப்பித்து செல்லக் கூடியவர்களுக்கு மட்டுமே விலங்கு போடலாம் என்றும் கட்டளையிட்டுள்ளது. இனி கைது செய்யப்பட்டோரின் உரிமைகளைக் காண்போம்.

ஒருவர் கைது செய்யப்பட்டால், அதற்கான காரணங்கள் அவருக்குத்  தெரிவிக்கப்பட வேண்டும். அவர் பிடிப்பாணையின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையைப் பார்க்க அவருக்கு உரிமை உண்டு. அவருடைய விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு.

கைது செய்யப்பட்ட நபரை, காவல்துறை கைது செய்த 24 மணிநேரத்திற்குள்ளாக அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணிநேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை. குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலைத் தொடரச் சொன்னால் 24 மணிநேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.



கைது குறித்து உச்சநீதிமன்றத்தின் 11 கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். இதனுடைய நோக்கம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தம்மைக் கைது செய்யும் அதிகாரியின் பெயர் என்ன? அவர் என்ன ரேங்க்  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்யவேண்டும். அந்தக் கைது குறிப்பில் ஒரு சாட்சியம் கையெழுத்து வாங்க வேண்டும் மற்றும் அதில் கைது செய்யப்படட நேரம் காணப்படவேண்டும்.

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர் / நண்பர் / தெரிந்தவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரத்தை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யும் போது என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

6. கைது செய்த பின்பு, நேரடியாக காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டும். அதே போல் காவல்நிலையத்தில் உள்ள டைரியில் மேலே கண்ட விவரங்கள் பதியப்படவேண்டும்.

7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும். அதில் காவல்துறை அதிகாரியும், கைதியும் கையொப்பம் செய்ய வேண்டும். மேலும், அதனுடைய நகல் கைது செய்யப்பட்டவருக்குத் தரப்படவேண்டும்.

8. கைது செய்யப்பட்டவர் விரும்பினால், தகுதி வாய்ந்த மருத்துவரால் சோதனை செய்யவேண்டும்.

9. மேலே கூறப்பட்டுள்ள தஸ்தாவேஜூகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவருக்கு காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

10. கைது செய்யப்பட்டவர் காவல்துறையின் காவலில் இருக்கும் போது எதிரி (கைது செய்யப்பட்டவர்) தன்னுடைய வழக்கறிஞரை சந்திக்க விரும்பினால் தடை செய்யக்கூடாது.

11. எதிரி கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்திற்குள் அவரது கைது பற்றி மாவட்டத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல்கள் தனி நோட்டிஸ் போர்டில் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படுமா என்பது கேள்வியே. இருப்பினும் இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு செல்லமுடியும். அத்தகைய நேரங்களில் காவல்துறை அதிகாரியை நீதிமன்றம் கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யலாம்.


************************************************************************************




No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget