குடிநீருக்கு தகுதியில்லாத தாமிரபரணிதமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆறு அதன் முகத்துவாரத்திலிருந்து சுமார் 3 ½ கி.மீ தூரத்திலேயே அதிக அளவில் மாசுபடுத்தப்படுகிறது.
காரையாறு அணைக்கட்டிலிருந்து வெளியாகும் தூய்மையான தாமிரபரணி நீர், அணைக்கட்டின் கீழே சுமார் 3 ½ கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சொரி முத்து ஐய்யனார் கோவில் அருகிலேயே மிகப் பெரிய அளவில், குடிநீருக்கு தகுதியில்லாத அளவிற்கு மாசு படுத்தப்படுகிறது.
சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பும் சமீபத்தில் ஒரு சிறப்பு நீர் ஆய்வை மேற்கொண்டது. காரையாறு தாமிரபரணி நீர் தேக்கத்திலிருந்து பாபநாசம் கோவில் முன்பு வரை உள்ள 6.63 கி.மீ. இடவெளி தூரத்தில் 7 இடங்களில் தாமிரபரணி நீரை எடுத்து பரிசோதனை செய்தனர்.
இந்த ஆய்வு சுற்றுச்சூழல் விஞ்ஞானி பேராசிரியர் யு.பு.முருகேசன் தலைமையில் 20 நாட்கள் நடைபெற்றது. இதே போன்ற ஆய்வு இதற்கு முன்பும் இதே இடத்தில் 2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்றிருக்கிறது. அச்சமயம் சொரிமுத்து ஐய்யனார் கோவில் அருகிலும் பாபநாசம் சிவன் கோவில் அருகிலும் எடுத்த பரிசோதனை நீரில் “டோட்டல் - கோலிபார்ம்ஸ்” (Total coliforms) என்னும் பாக்டிரியாவின் எண்ணிக்கை 100 மிலி நீரில் 844 – 1,300 என்ற அளவில் மட்டுமே இருந்தது.
ஆனால், தற்போது நிலமை 100 சதவிகிதம் அதிகரித்து குடிநீருக்கு உபயோகமற்ற அளவில் 100 மி.லி. நீரில் பாக்டிரியாவின் எண்ணிக்கை 2,400க்கும் அதிகமாக உள்ளது. அவர்களிடம் உள்ள பரிசோதனை கருவியில் இந்த அளவிற்கு மேல் பாக்டிரியாக்களின் எண்ணிக்கையை கணக்கிடமுடியாது என்கின்றனர். அதிக தொழில் நுட்பம் வாய்ந்த நுண்ணிய கருவியின் மூலம் இந்த நீரில் கலந்துள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டிரியாவை கணக்கிட்டால் 100 ஆடு நீரில் பல லட்சம் கிருமிகள் இருக்கும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை ஒட்டிய 20 தினங்களில் காரையாறு சொரிமுத்து ஐய்யனார் கோவில் பகுதியிலிருந்து பாபநாசம் சிவன் கோவில் பகுதி முடிய உள்ள சுமார் 3. கி.மீ பகுதியில் கொட்டப்படும் கழிவுகளே அனைத்து நீரும் மாசு படுவதற்கு பெரிதும் காரணமாக உள்ளது. பக்தர்கள் பலியிடும் உயிரினங்கள் மற்றும் பக்தர் கூட்டத்தின் கழிவுகள் முதலானவைகளே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள குடிநீருக்கான தரத்தில் 100 மி.லி. நீரில் 50 எண்ணிக்கை "டோட்டல் கோலிபார்ம்ஸ்” (Total coliforms) மட்டுமே இருக்கலாம் என அனுமதிக்கிறது. வேறு எந்தவிதமான பேக்கல் கோலி பார்ம் ஒன்று கூட குடிநீரில் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.
2ஃ8ஃ13 முதல் 16ஃ8ஃ13 முடிய சொரிமுத்து ஐய்யனார் கோவில் அருகில் பரிசோதிக்கப்பட்ட நீரில் உடலுக்கு கேடு விளைவுக்கும் பாக்டிரியாவின் எண்ணிக்கை, 100 ஆடு நீரில் 2,400க்கும் அதிகமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் திருநெல்வேலி டவுண், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கழிவு நீரையும் தாமிரபரணி நதியில் இணைத்து விடுகிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து நதிகளை இணைக்கக் கேட்டு போராடி வரும் இத்தருணத்தில் இவர்கள் சாக்கடையை நதி நீரில் இணைக்கிறார்கள். தாமிரபரணி நதிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இந்நிலையென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நதி கரையோரமாக இருக்கும் குரங்கினி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழாவும், ஏரல் சேர்மன் ஆடி அமாவாசை திருவிழாவும் தன் பங்குக்கு தாமிரபரணி ஆற்றை மேலும் கூவத்திற்கு ஈடாக மெருகேற்றி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியின் அனுமதியுடன் தாமிரபரணியாற்றில் குப்பைகள் கொட்டப்படுவது, மிகவும் வேதனை அளிக்கிறது
120 கி,மீ பயணம் செய்யும் தாமிரபரணியாற்றின் துவக்கத்தில் உள்ள 3.5 கி.மீ தூரத்திலே இவ்வளவு மாசுகள் நீரில் கலந்தால், அதன் கடைமடையின் நிலமை என்னவாக இருக்கும் என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களின் குடிநீருக்கும் தாமிரபரணி ஆறு பயன்படுகிறது. ஆற்று நீரை மாசு படுத்தாமல் இருக்கின்ற வகையில், அரசு மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆற்று நீரை மாசுபடுத்தாமல் புனிதமாக பயன்படுத்த வேண்டும் என்பது இங்குள்ள சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசும், மக்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment