தியாகி இமானுவேல் சேகரனின் 56–வது நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினை விடத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் சுந்தர்ராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சதன் பிரபாகரன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சுப.தங்க வேலன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், பரமக்குடி நகர செயலாளர் சேதுகருணாநிதி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் இமானுவேல் சேகரன் பிறந்த பரமக்குடி செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் ஆகியோர் ஊர்வலமாக வந்து இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இமானுவேல்சேகரன் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 ஐ.ஜி.க்கள், 6 டி.ஐ.ஜி.க்கள், 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 7 உதவி சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
65 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகனங்கள் சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோல் பரமக்குடி, மானாமதுரை, உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும், மதுரை ரெயில்வே சூப்பிரண்டு சம்பத்குமார், டி.எஸ்.பி. வெள்ளையன், கோட்ட பாதுகாப்பு ஆணையாளர் சுகுமாறன், உதவி கோட்ட ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே கேட்டுகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் டவுனில் அரியலூர் எஸ்.பி. ஜியாவுல் ஹக், கடலூர் ஏ.டி.எஸ்.பி., அரியலூர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 3 பட்டாலியனை சேர்ந்த கம்பெனி போலீசார் 650 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட விரோத செயல்களை தடுப்பதற்காக ஆளில்லா உளவு விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விமானத்துக்குள் அதிநவீன கம்ப்யூட்டர்கள் உள்ளதால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடை பெறும் நிகழ்வுகளை இது பதிவு செய்யும். இதன் மூலம் சோதனை சாவடிகள், அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களின் வழித்தடங்கள், பிரச்சினைக்குரிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment