1981 ஆவணம்
இங்கு வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆவணம், சில புரிதல்களை நமக்குத் தரும். சாதி மோதலின் தொடக்கப் புள்ளியாக இருப்பவர்கள் யார்? சாதி இந்துக்களின் அணிச் சேர்க்கை எத்தகையது? அரசு எந்திரமும், காவல் துறையும் சாதி இந்துக்களுக்கு எவ்வகையில் உதவுகின்றன என்ற புரிதல்கள் – இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் "பரமக்குடி படுகொலை'கள் வரை – எப்படி மாறாமல் தொடர்ந்து வருகின்றன என்பதை உணர்த்தும்.
1981இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரத்தில் மிகப் பெரிய சாதி மோதல் நிகழ்ந்தது. இதற்கு வித்திட்டோர் அகமுடையார் எனப்படும் சேர்வை சமூகத்தினர். "முக்குலத்தோர்' என தம்மை அழைத்துக் கொள்ளும் சாதிக் கூட்டத்தில் ஒரு தரப்பினர் இவர்கள். ராமநாதபுரம் நகரத்தில் பெரும்பான்மை சாதியினராகவும், சமூக – அரசியல் அரங்கில் இந்நகரத்தில் முதன்மை சாதியாகவும் இருப்பவர்கள். அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்புகளையும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.
சேதுபதி சமஸ்தானத்தில் திவான்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புகள் தொடங்கி, காங்கிரசு கட்சியின் ஆட்சியதிகாரம் முதல் இன்றைய அ.தி.மு.க. ஆட்சி வரை, ராமநாதபுரம் நகரத்தில் அகமுடையார் சாதியினரே தீர்மானிக்கும் ஆதிக்க சாதியினர். இவர்களுக்குப் பக்க பலமாக ஏனைய சாதி இந்துக்கள் இருக்கின்றனர். சாதி இந்துக் கூட்டத்தாரின் திட்டங்களை "வன்முறை' வடிவில் நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாக இருப்பவர்கள் "மறவர்' சாதியினர். நூற்றாண்டுக் காலமாக, இச்சூழல் மாறாத வடிவத்தில் தொடர்ந்து நிலைப்பெற்றிருக்கிறது.
1981 ஆம் ஆண்டு சாதி மோதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக, "மள்ளர்' சமூகத்தினர் அடைந்த பாதிப்புகள் குறித்து இங்கு வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆவணம், சில புரிதல்களை நமக்குத் தரும். சாதி மோதலின் தொடக்கப் புள்ளியாக இருப்பவர்கள் யார்? சாதி இந்துக்களின் அணிச் சேர்க்கை எத்தகையது? அரசு எந்திரமும், காவல் துறையும் சாதி இந்துக்களுக்கு எவ்வகையில் உதவுகின்றன என்ற புரிதல்கள் – இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் "பரமக்குடி படுகொலை'கள் வரை – எப்படி மாறாமல் தொடர்ந்து வருகின்றன என்பதை உணர்த்தும்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் பிரிவு 3, மற்றும் 4 ஆம் நிலைகளில் நடுவண் அரசுப் பணியிடங்களில் மட்டுமே முழுமையாக நிரப்பப்பட்டுள்ளனர். 1980களில் ரயில்வே, அஞ்சல், துறைமுகம் உள்ளிட்ட நடுவண் அரசுத் துறைகளில்தான் பட்டியல் சாதியினர் ஒதுக்கீட்டு அளவில் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையே ராமநாதபுரத்திலும் இருந்தது. இம்மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்களில் மட்டும், பட்டியல் சாதியினர் ஒருவராவது இருப்பர். இதை அறிந்து வைத்திருந்த சாதி வெறியர்கள், சாதி மோதல் நேரங்களில் அஞ்சல் நிலையங்களைக் குறிவைத்து, தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மேலும், பட்டியல் சாதியினர் எவரெவர் என்பதை அங்கிருக்கும் சாதி இந்துக்களின் மூலம் அறிந்து கொண்டு, அவர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி தாக்கியிருக்கின்றனர்.
அப்படி பாதிக்கப்பட்ட தபால்–தந்தி ஊழியர்கள், அந்நேரத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அவர்கள் அன்றைய நாளில் அரசுக்கும், ஏனைய அமைப்புகளுக்கும் "ராமநாதபுரம் கலவரம்' என்ற தலைப்பில், அனுப்பிய முறையீட்டு மடலை – இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கும் வகையில் இங்கு வெளியிடுகிறோம்.
தபால்–தந்தி துறையில், தான் ஓய்வு பெறும் வரையில், NFPTE என்ற பொது சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி, 1999 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த திரு. இட்லர் என்ற தொருவளூர் காசி அவர்களால் எழுதப்பட்டது இம்முறையீட்டு மடல்.
11.9.2011 அன்று ஜெயலலிதா அரசின் காவல் துறையால் நிகழ்த்தப்பட்ட பரமக்குடி படுகொலைகளின் தொடர்ச்சியாக, அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் தலித் மக்கள் வாழும் கிராமங்களில் நடந்து வரும் தேடுதல் வேட்டையின்போது – காவல் படையிடம் அகப்பட்டு விடாமல் தப்பிக்க எண்ணி, 13.9.2011 அன்று இரவில் வயல் காடுகளுக்குள் ஒளிந்து கொள்ள ஓடியதால், பெரிய பள்ளத்தில் விழுந்து, மார்பில் கல் அறைந்து அவ்விடத்திலேயே இறந்துபோன தொருவளூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வேலு (வயது 45) என்பவர் இவருடைய உறவினர்.
மேலும், அரசின் பயங்கரவாதத் தேடுதல் வேட்டையில் தனது வீடும் குறிவைக்கப்பட்டதாகச் சொல்லும் இந்த ஆவணத்திற்குரியவரான தோழர் காசி, தந்தை பெரியாருக்கு அறிமுகமாகி, அவரது பெருந்தொண்டராக சாதி, மதம் கடந்து பொது சமூகத்தில் அயராது பணியாற்றி வருபவர். திராவிடர் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
ராமநாதபுரத்தில் கலவரம் (ஆவணம் 1981)
பங்குனி உத்திர தினத்தன்று கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். மாணவர், பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். மாணவி, சேர்வை வகுப்பைச் சேர்ந்தவர். இதைக் கண்டு பொறுக்காத சிலர் மாணவனைக் கண்டித்து அனுப்பினர். இன்னொரு பக்கத்தில், சிலர் வண்டிக்காரத் தெருப்பெண்களைக் கேலி பேசியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியாது. கல்லூரி விடுதி மாணவர் ஒருவர் தன் நண்பனைப் பார்க்க, வண்டிக்காரத் தெருப்பக்கம் சென்றிருக்கிறார். அங்கு இருந்த பெண்மணி, பங்குனி உத்திரத்தன்று கேலி பேசியவர்களில் ஒருவன் போல் தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார். உடனே அருகிலிருந்த சேர்வை சாதியினர் அம்மாணவரை நய்யப்புடைத்து அடித்து விட்டனர். அடிபட்ட மாணவர் எந்தவொரு பண்பாடு தவறியும் நடக்காதவர். அவர் கல்லூரி விடுதிக்குச் சென்று, தான் தாக்கப்பட்டதைச் சொல்லியிருக்கிறார். விடுதி மாணவர்கள் புறப்பட்டு வந்து, அந்த மாணவரை அடித்தவர்களை மட்டும் திருப்பி அடித்து விட்டுச் சென்று விட்டனர்.
திரு. செல்லத்துரை சேர்வை என்பவர், மாணவர்கள் வந்து அடித்துவிட்டுச் சென்றதாக போலிசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அப்போதிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் போலிசாருடன் சென்று – இரவு 10 மணிக்கு மேல், விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் எழுந்திருந்து தப்பிக்க முடியாவண்ணம், படுக்கையிலேயே அடியடியென்று அடித்துவிட்டனர். அதில், ஒரு மாணவருக்கு கைபுஜம் கீழே இறங்கி விட்டது. இன்னொருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மண்டை உடைந்து ரத்தப்போக்கு வந்தவுடன் போலிசார் சென்று விட்டனர். 23.3.81 அன்று போலிசின் பயங்கரமான அடக்குமுறைக்கு எதிராக, விடுதி மாணவர்கள் மவுன ஊர்வலம் அனுஷ்டித்தனர். அதை சரியான முறையில் நிறைவேற்ற முடியாதபடி, போலிசாரும் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்களும் மாணவர்களை விரட்டியடித்தனர்.
அப்போது "பள்ளன்', "பள்ளன்' என்று தகாத வார்த்தைகளை வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் சத்தமிட்டுக் கொண்டே வந்தனர். அவர்கள் அரண்மனை முன்பு வந்தபோது, கடைச்சாமான்களை வாங்கிக் கொண்டு பஸ்சுக்காக காத்திருந்த பயணி ஒருவர், “ஏண்டா பள்ளன், பள்ளன் என்று பேசுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேணும்?'' என்று சொல்லி பக்கத்துக் கடையிலிருந்த வாளித் தண்ணீரைக் கொட்டிவிட்டு, வண்டிக்காரத் தெரு பையனை அடித்துவிட்டார். இதற்குள் இன்னும் மூன்று பேர் வந்து, அப்பையனைக் கடுமையாகத் தாக்கவே அவர்கள் ஓடிவிட்டனர். இந்தப் பயணிகள் பஸ் ஏறிச் சென்றுவிட்டனர்.
விடுதி மாணவர்கள் எங்கிருந்தோ கம்புகளைக் கொண்டு வந்து, வண்டிக்காரத் தெருக்காரர்களை விரட்டிக் கொண்டு சென்றனர். யாரோ ஒருவர் போலிசுக்கு தகவல் சொல்ல, பொது மக்களையும் கலைத்தனர். அப்போது "சித்திரவேல்' என்ற தபால் தந்தி ஊழியரை, அவருக்கு அறிமுகமான உள்ளூர் போலிஸ்காரர் அடித்துவிட்டார். அவர் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க, மீண்டும் சித்திரவேலுவை அப்போலிசார் அடித்துவிட்டார். அப்போது மணி சுமார் பகல் 1.30 இருக்கும் (தேதி 23.3.81). திரு. சித்திரவேல் மருத்துவமனைக்குச் சென்றபொழுது, அவர் கை விரலில் போலிசின் தாக்குதலால் பலமான காயம் ஏற்பட்டிருந்தும், மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. அவர் உடனே ஆர்.டி.ஓ. விடம் முறையிட்டார். ஆர்.டி.ஓ. சிகிச்சைக்கு உத்தரவிடுவதாக சொன்னார்.
தபால்–தந்தி இலாகா யூனியன் தலைவர்கள், போலிஸ் எஸ்.பி. அவர்களுடன் பேசி ஒரு வழியாகச் சமாதானமாகிவிட்டது. அதன்பின் மாணவர்கள், போலிஸ், வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் கூட்டாகப் பேசி சமாதானம் ஆயிற்று. ஆனால், வண்டிக்காரத் தெருக்காரர்கள் விடுதி மாணவர்கள் தங்களை விரட்டி வந்ததை, ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அப்போதிருந்த ஆய்வாளரைக் கலந்து பேசியபோது, வண்டிக்காரத் தெருக்காரர்களை அவர் ஊக்குவித்து, போலிசின் முழு ஆதரவு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த விபரம் விடுதி மாணவர்களுக்குத் தெரிந்து விட்டது. அவர்கள் மரக்கடை வைத்திருக்கும் ஆறுமுகம் என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் உதவியோடு ஒரு நோட்டீஸ் அடித்து வெளியிட்டிருக்கிறார்கள். நோட்டீஸின் நகல் கிடைக்காததால் இத்துடன் இணைக்கப்படவில்லை.
உள்ளூர் போலிஸ் ஒத்துழைப்பு கிடைக்கிறது என்றவுடன், செல்லத்துரை என்ற கடத்தல் பேர் வழியின் தலைமையில் முதுநாள் என்ற ஊரைச் சார்ந்தவர்கள், போலிசுடன் இணைந்து, தபால்–தந்தி இலாகாவில் பணியாற்றும் பள்ளர்களை மட்டும் அடித்து விரட்டத் திட்டம் தீட்டினர். இந்தத் திட்டங்கள் எல்லாம் போலிஸ் ஆய்வாளருக்கு மிக நன்றாகத் தெரியும். ஏனென்றால், இவைகளை ஊக்குவித்ததே அவர்தான். 7.4.1981க்குப் பிறகு ஒரு நாள், மிளகாய் வற்றல் கமிஷன் கடையில் விற்பனைக்குச் சென்றவர்களை திடீரென அரிவாள் கம்புகளோடு சென்றவர்கள் தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒரு பெண்மணி, உட்பட இரண்டு மூன்று பேர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் (தாக்கப்பட்டவர்கள்) அனைவரும் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு மத்தியில் லாரியில் பாரம் ஏற்றுபவர்கள், பஸ் நிலையத்திற்கு அருகில் சாப்பிடச் சென்றிருக்கிறார்கள். கடையில் தோசையும், சாம்பாரும் மட்டுமே இருந்திருக்கிறது. தோசைக்குச் சட்னி கேட்டபோது, “பள்ளப்பயலுக்கெல்லாம் சாம்பார் போதும். சட்னி என்னடா வேண்டிக் கிடக்கிறது?'' என்று சர்வர் சொல்லியிருக்கிறார். சாப்பிடச் சென்றவர்கள் கோபமாகி, சர்வரை அடித்து, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு, பஸ்சில் போய் உட்கார்ந்து கொண்டனர். பஸ் புறப்படுவதற்குள் ரகு என்ற ரவியின் தலைமையில் கம்பு, கத்திகளுடன் வந்து, பஸ்ஸில் இருந்த பயணிகள் அத்தனை பேரையும் கீழே இறக்கிவிட்டு பள்ளர்களை மட்டும் கடுமையாக அடித்து விட்டனர்.
மேற்கூறிய அடிதடி சம்பவங்கள் இரண்டு பக்கத்து ஊர்களிலும் பரவவே, 10.4.1981 இல் பேராவூர்க்காரர்கள் திரு. கிளவன் என்பவர் தலைமையில் நியாயம் கேட்க ராமநாதபுரம் வந்தனர். ராமநாதபுரம் வந்தடைவதற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடி விட்டனர். கேணிக்கரையில் சேர்வாரர் கடைகளை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். உடனே போலிஸ் விரைந்து வந்து கூட்டத்தினரைத் தடுத்து நிறுத்தியது. கூட்டத் தலைவரான திரு. கிளவன், போலிசோடு பேசி நியாயம் கேட்டார். கூட்டத்தினர், தாங்கள் சேர்வாரர்களால் அவமானப்படுத்தப்பட்டும் போலிஸ் தக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரப்பட்டு நகருக்குள் முன்னேறி விட்டனர். போலிஸ்காரர்கள், கூட்டத்தை சமாளிக்கத் தெரியாமல் தலைவரான கிளவனைச் சுட, அவர் சுட்ட வேகத்தில் அவ்விடத்திலேயே விழுந்து உயிர் நீத்தார். மற்றவர்கள் படுகாயமடைய, கூட்டம் கலைந்து சென்றது.
அதன்பின்பு போலிசார் இறந்தவர்கள், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ராஜ சூரியமடை என்ற ஊரைச் சார்ந்தவர்கள் (மறவர்கள்) ஊர்வலம் போல் கத்தி அரிவாளுடன் வந்து, திரு. கோவிந்தன் வக்கீல் (பள்ளர்) அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்து, சட்டப்புத்தகங்கள், அவரது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து, மதுரை–மண்டபம் ரோட்டில் போட்டு எரித்தார்கள். பள்ளருக்கு எதிராகக் கோஷம் போட்டுக் கொண்டே ஊருக்குள் சென்றார்கள்.
அப்பொழுது போலிஸ் வண்டிக்காரத் தெருவைச் சார்ந்தவர்கள், ராஜசூரிய மடையைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சேர்வை, மறவர் சாதியினர் அனைவரும் சேர்ந்து கொண்டனர். பிற்பகல் (10.4.1981) தபால் அலுவலகத்தில் பணியாற்றும் பள்ளர்களை ஊரை விட்டுச் செல்லுமாறு மிரட்டினார்கள். தகாத வார்த்தைகளைச் சொல்லி, தெருத் தெருவாகவும், தபால் அலுவலக ஊழியர் சிலர் தங்கியிருக்கும் வீடுகளுக்கும் சென்று கோஷமிட்டனர். ஒரு அம்பாசிடர் காரில் மைக்கைக் கட்டி கொண்டு “பள்ளனைக் கண்டால் அடி'' என்று தகாத வார்த்தைகளைச் சொல்லி, தெருத் தெருவாக வலம் வந்தார்கள். இதைப் பார்த்தும் போலிஸ் அவர்களுக்கு எதிராக, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலிசின் ஆதரவால் உற்சாகமடைந்த சேர்வை கூட்டம் – வீடு வீடாகச் சென்று, ஊரைப் பாதுகாக்க செலவுக்கு வேண்டுமென்று, வீடு ஒன்றுக்கு 10 ரூபாயும் கடை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் அதற்கு மேலும் வசூலித்தனர். சிறு கடைகளில் கடைகளின் வியாபாரத்திற்குத் தக்கவாறும் சிறு கூட்டம் வசூலில் இறங்கிவிட்டது. இன்னொரு கூட்டம் பள்ளர் வீடுகள் அல்லது வீட்டிலுள்ள உடைமைகளைத் தீ வைத்துக் கொண்டே வந்தது. போலிஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததே தவிர, நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக, போலிஸ் பள்ளர்களை விரட்டியடிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தனர்.
10, 11.4.1981 ஆகிய நாட்களில் மண்டபம் அருகிலுள்ள உச்சிப்புளி பகுதிக்கு தகவல் கொடுத்து, 500 ஆட்களை உடனே அனுப்பச் சொல்லி, சேர்வை கூட்டத்தினர் சீட்டுக் கொடுத்து விட்டனர். அங்கிருந்த மறவர் ஒருவர் அதை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பள்ளர் ஒருவர் உடனே நிலைமை என்னவென்று அறிந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தப்பிச் சென்றுவிட்டார். இவ்வளவிற்கும் அந்த மறவரும், அந்தப் பள்ளரும் மிக நெருங்கிய பழக்கமுடையவர்கள். 11.4.1981இல் தபால் அலுவலகங்களில் பணியாற்றும் அத்தனை பள்ளர்களையும் தகாத வார்த்தைகள் பேசி வெளியேற்றிவிட்டனர். இதில் 5 குடும்பங்கள் மட்டும் தலைமை தபால் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மீதமுள்ள பள்ளர் குடும்பத்தினர் எப்படியோ அடிபடாமல் தப்பிச் சென்றுவிட்டனர். அக்கூட்டத்தினர் தந்தி அலுவலகத்தைத் தாக்கிய பொழுது, தந்தி அலுவலகப் பொறுப்பாளர் போலிசுக்குத் தகவல் கொடுக்க, போலிஸ் இரண்டு பேர்களை மட்டுமே பிடித்துச் சென்றது.
வெளியூர்களில் செய்தி பரவியவுடன் தண்ணீர் சப்ளையும், மின்சப்ளையும் துண்டித்ததோடு, வெளியூர் விஷமிகள் ராமநாதபுரம் சென்றுவிடாதபடி, பஸ் மற்றும் லாரிகளை, சத்திரக்குடி லாந்தை கிராமத்தை பள்ளர்கள் மறித்தனர். ஆனால், போலிசார் அவர்களைத் துரத்தியடித்தனர். தலைமை தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தவர்களை தலைமை தபால் அதிகாரி, ஆர்.டி.ஓ. உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டார். ஒரு பெண்மணியின் உதவியோடு திரு. சித்திரவேல் என்ற ஊழியர் தப்பிவிட்டார். அவரை ஒரு மூட்டையில் கட்டி வெளியில் கொண்டு வந்து, தப்பிக்க வைத்தனர்.
போலிசின் மீதும், சேர்வாரர்கள் மீதும் உள்ள வெறுப்பினால் மனம் நொந்த பள்ளர்கள், வெல்லா ஆனைக்குடி கிராமத்தில் தீ வைத்து விட்டனர். தீ வைப்பதை எதிர்த்தவர்களை மட்டும் தாக்கியிருக்கின்றனர்; மற்றவர்களை ஒன்றும் செய்யவில்லை. வீட்டிலுள்ள பொருள்களையும் கொள்ளை அடிக்கவில்லை. போலிஸ் உதவியோடு செல்லத்துரை என்ற நபர், வெல்லா கிராமத்தில் நெல் மூட்டைகள் சிலவற்றை கமிஷன் ஏஜென்டுகளுக்கு விற்றதாக அறியப்படுகிறது. பள்ளர்கள், பச்சைக் குழந்தையை வெட்டித் தீயில் போட்டுவிட்டதாக ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள். உண்மையில் அது நடக்கவே இல்லை. ஆனால், ராமநாதபுரத்தில் குளத்தூரைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்ற ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும், அவர் மனைவியையும் (பள்ளர்கள்) நிர்வாணமாக்கி, அடித்து, ஓட, ஓட சேர்வார்கள் விரட்டியிருக்கிறார்கள்.
ராமநாதபுரத்திற்குக் கிழக்கே மண்டபம் வரை உள்ள பள்ளர்களை அடித்து, விரட்டி, இம்சித்து அவர்களின் வீடுகளுக்குத் தீயிட்டு, உடைமைகளையும் எரித்து விட்டனர். போலிஸ் பாதுகாப்பு தரப்படவேயில்லை. ரயிலில் தப்பிச் சென்றவர்களை பிளாட்பாரத்தில் மறித்து, அடித்துப் போட்டு சென்றிருக்கிறார்கள். படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். எத்தனை பேர் இறந்தவர்கள், எத்தனை பேர் படுகாயப்படுத்தப்பட்டனர் என்ற விவரமும் யாருக்கும் தெரியாது. 16.4.1981 இல் தமிழக முதல்வர் (எம்.ஜி.ஆர்.) ராமநாதபுரம் வந்தபோது, அதிகாரிகள் அழைத்துச் சென்ற இடங்களுக்கு மட்டும் சென்றார். ஆனால், பள்ளர்கள் ராமநாதபுரத்திலும் ராமநாதபுரத்திற்குக் கிழக்கேயும் பட்ட கஷ்டங்களையும் உயிர், உடைமை இழப்புகளைப் பற்றி சரியாக விசாரித்ததாகத் தெரியவில்லை. அதை சரியான முறையில் அதிகாரிகள் எடுத்துச் சொன்னதாகவும் தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள் பின்வருமாறு:
தமிழக முதல்வர் ராமநாதபுரத்தை விட்டுச் சென்றவுடன், உள்ளூர் போலிஸ் துணையுடன் ரிசர்வ் போலிஸ் மோசமான அடக்குமுறையை மேற்கொண்டனர். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். மாணவ, மாணவியர் துன்புறுத்தப்பட்டனர். சைக்கிள், தையல் மிஷின் மற்றும் பிற உடைமைகள், ஓட்டு வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வீடுகளில் இருந்த பொன்னும் பொருளும் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டன. கலவரத்தில் கொஞ்சம் கூட சம்பந்தப்படாத பள்ளர்களை – இரவு பகல், சாப்பாட்டு நேரம், தூங்கும் நேரம், துக்க நேரம் என்று பாராமல் விரட்டி அடித்துள்ளனர். ஓடியவர்களைத் தவிர, வீடுகளில் இருந்த பள்ளர்களைப் பிடித்துக் கொண்டு வந்து கொலை, கொள்ளை, தீவைத்தல் என்ற மூன்று பெருங்குற்றங்களைச் செய்ததாக, குற்றப்பத்திரிகை தயார் செய்து சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் தபாலாபீசை விட்டு வெளியே சென்ற சத்திரக்குடி இ.டி.எம்.சி. திரு. கந்தனும் ஒருவராவார். சேமனூரில் ஒரு பெரியவர் மரணமடைய, அவரை சரியான முறையில் அடக்கம் செய்ய விடõமல் போலிஸ் விரட்டியடித்துள்ளனர். 16 வயது குறைந்த சிறுவர்கள் சிலர் மட்டும் அப்பெரியவரை அடக்கம் செய்திருக்கிறார்கள். தகாத வார்த்தைகளைச் சொல்லி, சத்திரக்குடி வட்டாரத்தைச் சார்ந்த பெண்களை அடித்திருக்கிறார்கள். பஸ்களை நடுவழியில் மறித்து, யாராவது பள்ளன் இருந்தால் கீழே இறங்கு என்று சொல்லி, பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பள்ளர்களைக் கீழே இழுத்து அடித்து, கொலை, கொள்ளை, தீயிடுதல் போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சிறையிலடைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி போலிஸார் ஏன் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று தீர விசாரித்ததில், சத்திரக்குடி போலிஸ் சுட்டது சரிதான் என்று நிரூபிக்கத்தான் இவ்விதம் போலிஸ் நடக்கிறார்கள் என்று பதில் கிடைத்தது. சத்திரக்குடி போலிஸை பொதுமக்கள் துன்புறுத்தவோ, போலிஸ் ஸ்டேஷனைத் தாக்கவோ முற்படவில்லை. ஆனாலும் சத்திரக்குடி தலைமைக் காவலர் வேண்டுமென்றே சுட்டுவிட்டார். அவர் சுட்டதில் மீன் விற்கிற பெண்மணியும், கயிறு வாங்கிக் கொண்டிருந்த ஒருவரும் அடங்குவர். அவர்களில் ஒருவர் மறவர்; ஒருவர் கோனார் மற்றவர்கள் யாரோ தெரியாது. ஆனால், அத்தனை பேரும் கடைக்குச் சாமான் வாங்க வந்தவர்களே. அன்றைக்கு தபால்–தந்தி இலாகா சரியான முறையில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்திக் கம்பங்கள், தந்தித் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. ஏனென்றால், ராமநாதபுரத்தில் நடந்த சம்பவங்களை 10.4.1981 இல் தொலைபேசியில் கேட்டவர்கள் இருக்கிறார்கள். ராமநாதபுரம், பரமக்குடி கிராமத்தையும் தபால்–தந்தி ஆபீஸ்களில் உள்ள ரிக்கார்டுகளைப் பார்த்தாலே தெரியும். சத்திரக்குடியிலும் தபால்–தந்தி ஆபீஸ் இருக்கிறது. ஆகவே, போலிசார் சுட வேண்டிய அவசியமில்லை. தந்தி தொடர்பு துண்டிக்கப்பட்டதென்று சொல்வது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
11.4.1981க்குப் பிறகு தபால்–தந்தி அலுவலகங்களைத் தவிர, மற்ற அலுவலகங்களில் பணியாற்றும் அத்தனை பள்ளர்களையும் “பள்ளனே வெளியே போ'' என்று சொல்லி, ஒவ்வொரு ஊருக்கும் டாக்சியில் போய் விரட்டியிருக்கிறார்கள். அலுவலர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாததால், தத்தம் ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். இதுவரை பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட, ராமநாதபுரத்திற்குத் திரும்பிப் போய் பணியாற்றவில்லை. ஆனால், ஒருவர் மட்டும் பணியாற்றச் சென்றபோது, பணியாற்ற வரவேண்டாம் என்று 20.4.1981க்குப் பிறகும் விரட்டியிருக்கிறார்கள். அவர் பொதுப் பணித்துறை இலாகாவைச் சேர்ந்தவர்.
தமிழக முதல்வர் ராமநாதபுரம் வந்து 2 நாட்கள் தங்கிச் சென்றபிறகும் கூட, பள்ளர்கள் சேர்வை சாதியினரால் துன்புறுத்தப்பட்டனர். தற்போது, போலிஸ் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளர் சமுதாயத்தை இந்த அரசு வாழவிட வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் – எது சரியோ அது நடக்கட்டும். இந்த சித்திரவதை, அரசின் முழு ஆதரவோடு நடக்குமானால், பள்ளர்கள் ராமநாதபுரத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் மதம் மாறுவது நிற்காது. அத்தனை சகோதர எஸ்.சி., எஸ்.டி.க்களையும் மதம் மாற்றச் செய்வது நிற்காது என்று அரசிற்கு அறிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் சங்கம், ராமநாதபுரம்
kalla payaluku tunai pogum jayalalitha devudiya nu yela devendranukum terium
ReplyDeletekalla payaluku tunai pogum jayalalitha devudiya nu yela devendranukum terium
ReplyDelete