Monday, May 26, 2014

புதிய தமிழகம் கோரிக்கை


நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு புதுடெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.  சார்க் நாடுகளின் தலைவர்கள் என்கிற முறையில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் வலுத்துள்ளன. இதையடுத்து, ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் மோடியை வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே ராஜபக்சே வருகையை கண்டித்து நேற்று சென்னை பாரதீய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழ் உணர்வு கொண்ட எவரும் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொள்ளக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-





''உலகம் முழுவதிலுமிருக்கும் தமிழர்கள் அனைவரும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தற்போது மோடி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.'' என்றார்.

மேலும், மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர்.கிருஷ்ணசாமி, ''இதில் நான் எந்த வேற்றுமையையும் விதைக்க விரும்பவில்லை. ஆனால், ராஜபக்சேவின் வருகையை பொறுத்தவரையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.


1 comment:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget