“போக்குவரத்து துறை ஊழியர்களோட வேலை நிலைமை, அந்த துறையோட நிலவரம் பற்றி எங்க வாசகர்களுக்கு ஒரு அறிமுகம் மாதிரி….”
“போட்டோ எடுக்க கூடாது சரியா?”
”சரி, உங்க பேரு?”
“ஹ, பாத்தியா… போட்டோவே வோணாம்னு சொல்றேன், நீ பேரு இன்னான்னு கேட்கிறியே.. சரி, சீனிவாசன்னு வச்சிக்கயேன்”
“நீங்க இங்கே என்ன வேலை செய்யறீங்க?”
“உள்ற பணிமனைன்னு ஒன்னு இருக்கே… அதாம்பா வொர்க் சாப்பு. அதுல மெக்கானிக்கா கீறேன். பேரு போட மாட்டேன்னு சொல்லு, மேல பேசலாம்”
“ஏன் பேரு போட்டா என்ன பிரச்சினையா?”
”உனுக்கு இன்னா தெரியும். இங்கெ அதிகாரிங்க எதுக்குடா மெமோ குடுக்கலாம்னு அலையறானுங்க. இன்னாத்துக்கு வம்பு வச்சிக்கினு?”
“ஏன் உங்களுக்கு யூனியன் எல்லாம் தான் இருக்கே. தொழிலாளர்களுக்கு பிரச்சினைன்னா வரமாட்டாங்களா?”
“த்தூத்தெரிக்க… தப்பா நென்சிக்காத சார். பொறுக்கிங்க சார்.
பொறுக்கித் திங்கற பசங்க.. மெமோ மேல மெமோ குடுத்து சாவடிக்கிறான் சார். இந்த நாயிங்க ஒத்தனும் ஏன்னு கேக்க வரமாட்டான்.. சங்கத்துல சேரு, சந்தா கட்டு, தீக்கதிருக்கு சந்தா கட்டுன்னு தூக்கினு வருவான்”
“ஆமா… நீங்க தப்பு செஞ்சா தானே மெமோ குடுக்க முடியும். ஒழுங்கா வேலை செய்தா ஏன் மெமோ குடுக்க போறாங்க. மத்த ஊர்ல எல்லாம் அரசு பேருந்துகள் எப்படி இருக்கு. நம்ம ஊர்ல பாருங்க எல்லாம் ஓட்ட ஒடசலா ஓடிகிட்டு இருக்கே?”
“உனுக்கு இன்னாபா தெரியும். நாங்கெல்லாம் தொழில்காரங்க. எங்க கண்ணு பாக்க ஒரு வண்டிய கூட ரிப்பேரோட ஓட விட மாட்டோம். தோ, போவுது பாத்தியா.. நம்ப பாய் ஓட்டினு போறாப்லயே இந்த வண்டி. இது ஒரு வாரமா செட்டுல நின்னுகினு இருந்திச்சி. கியர் ராடு கட் ஆயி கெடந்திச்சி. ஏற்கனவே நாலு தபா பத்த வச்சி பத்த வச்சி ஓட்டியாச்சி… புதுசு கேட்டு இண்டெண்ட் போட்டு சலிச்சி போயிட்டோம். இந்த செட்டுல மொத்தம் 184 வண்டிங்க லைன்ல ஓடுது சார். ஆறு வண்டிங்க ஸ்பேர். அத்தினி ஸ்பேர் வண்டியுமே இப்ப லைன்ல தான் ஓடினு இருக்கு. எப்பயும் பத்து வண்டிக்கு மேல ஸ்பேர் இல்லாம செட்டுல நிக்கும். தோ, நம்ப பாய் வண்டிக்கு கூட கடேசி வரைக்கும் ஸ்பேரே தரல. அப்பால இருக்கற ராட பத்த வச்சி இன்னிக்கு காலைல தான் ரெடி பண்ணேன்”
“அப்படி ஏன் பண்றீங்க? ஸ்பேர் தரலைன்னா வேலை பார்க்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?”
“சொன்னா கேட்டுக்கறா மாதிரி ஆளுங்களா சார் டிபார்ட்மெண்டுல அதிகாரியா இருக்கான்? ஸ்பேர் இல்லன்னு அவனுக்கே நல்லா தெரியும். தெரிஞ்சும் ஏன் வண்டிய அட்டெண்ட் பண்ணலைன்னு ஒரு மெமோ குடுப்பான். ஏன் டிலே பண்றீங்கன்னு கேட்டு ஒரு மெமோ வரும். தோ.. பத்த வச்சி அனுப்பிருக்கனே… இது எங்கனா கால தூக்கினு நின்னுச்சினா அதுக்கு ஒரு மெமோ வரும். சார், இந்த போலீசுகாரனுக்கு கேஸ் கணக்கு காட்றதுக்கு டார்கெட்டு வச்சிருக்கானுங்களே… அது மேரி எங்க அதிகாரிங்களுக்கு ஒரு மாசத்துக்கு இத்தினி மெமோ குடுக்கனும்னு டார்கெட் வச்சிருக்கானுங்க சார்.. வருசத்துக்கு 260 வேலை நாளாவது குறைந்தபட்சம் வேலை பார்த்திருக்கணும். அதில் 259 நாளுக்கு ஒழுங்கா வேலை பார்த்துட்டு 260வது நாள்ல ஒரு வண்டி ஒக்காந்துகிச்சின்னாலும் இன்க்ரிமென்டை அடுத்த ஆறு மாசத்துக்கு தள்ளி வச்சிடுவானுங்க. ஒழுங்கா ஸ்பேர் பார்ட்ஸே இல்லாம எப்டி சார் வண்டிய சரி பண்ண முடியும்?”
“சுத்தமா உதிரி பாகங்கள் வாங்கவே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?”
”அப்டி நான் சொன்னேனா? அது அந்த மாதிரி இல்ல சார். இப்ப நீதான் ஸ்பேர் பார்ட்ஸ் வெண்டாருன்னு வச்சிக்க. தோ நம்ப டீ மாஸ்டரு தான் அதிகாரின்னு வச்சிக்க. நீ இன்னா பண்றே… அவரை மாசத்துக்கு ஒருக்கா கண்டுக்கறே. ‘ஐயா அதிகாரி.. இந்த இந்த ஸ்பேரெல்லாம் என் கொடோன்ல குமிஞ்சி போச்சி. இதுக்கு டெண்டரு விடு’ அப்படின்னு கேட்கறே. சொல்லி வச்சா மாதிரி அதுக்கு டெண்டர் கேட்பாரு நம்ப அதிகாரி. நீ இன்னா பண்றே.. அதாம்பா இப்ப நீ தானே வெண்டாரு… நீ இன்னா பண்றே அத்தினி பொருளையும் கொண்டாந்து எறக்கிட்டு துட்டு வாங்கினு போயிடறே… அடுத்த மாசமே தோ இருக்காரே நம்ப டீ மாஸ்டரு… அதாம்பா அதிகாரி, அவரு குலுமணாலிக்கு குடும்பத்தோட டூர் போறாப்ல. புரியுதாபா?”
”ம்ம்.. புரியுது.. இதுக்கு ஆடிட் எதுவும் கிடையாதா?”
”அதெல்லாம் இருக்கு. ஆடிட் பண்றவன் யாரு? அவனும் இன்னொரு அதிகாரி தானே? இந்த அதிகாரிங்க இருக்கானுங்களே இவனுங்களுக்கு மோட்டாருன்னா இன்னான்னு தெரியுமா, ட்ரான்ஸ்போர்ட்டுன்னா இன்னான்னு தெரியுமா? நான் முப்பது வருசமா இந்த லைன்ல இருக்கேன். எந்த வண்டில என்னா பிரச்சின வரும், எந்த ஸ்பேர் எப்ப போவும், எத்தினி நாளுக்கு ஒருவாட்டி சரிவீஸ் பண்ணனும் எல்லாம் எனக்குத் தெரியும். ஒரு வண்டியோட ஒரு மாச ட்ரிப் ஷீட்டை ஒரு பார்வை பார்த்தாலே சொல்லிடுவேன், அடுத்த ஆறுமாசத்துக்கு அது ரப்சர் பண்ணாம ஓடனும்னா இன்னா இன்னா செய்யனும்னு எனக்கு தெரியும்…”
”அப்ப நீங்க அதிகாரிங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே?”
”ம்க்கும்… நாங்க சொல்லி அவனுங்க புடுங்குனானுங்க. போ சார்… நாங்கெல்லாம் படிக்காத முட்டாளுங்க; எங்க கிட்டயெல்லாம் நின்னு பேசுனா அவனுங்க ஜபர்தஸ்து கொறஞ்சிடும் சார். இவனுங்க எதுனா டிகிரி படிச்சிகினு, கெவருமெண்டு பரிச்சை எழுதி பாஸ் பண்ணி, எவனுக்காவது மால் வெட்டி போஸ்டிங் வாங்கினு வந்திருக்கானுங்க. ஆனா, ஒருத்தனுக்கும் மோட்டார் லைன் பத்தி ஒரு மண்ணும் தெரியாது. மெமோ குடுக்க மட்டும் தான் தெரியும். மெமோ குடுத்து மெமோ குடுத்து எங்க வவுத்துல அடிக்க தெரியும். வெண்டாரு, காண்டிராக்டருங்க கழிஞ்சி போட்டத வழிச்சி நக்க தெரியும். கீழேர்ந்து மேல வரைக்கும் நல்ல உறிஞ்சி எடுத்துட்டானுங்க சார். எந்த மாடல் வண்டி பிரச்சின பண்ணுமோ அதையே சொல்லி வச்சா மாதிரி வாங்கித் தள்றானுங்க சார்”
”எந்த மாடல் நல்லா ஓடுது?”
”நம்ம ஊருக்கு எந்த மாடலுமே நல்லா ஓடாது. ஹா ஹா ஹா…”
”ஏன்?”
“நீ வேற ஸ்டேட்ல விசாரிச்சி பாரு. ஒரு வண்டி ஒரு சிப்டுக்கு அதிக பட்சமா 800 பேசஞ்சரை சொமக்குது. இந்த மெட்ராஸ்ல, சராசரியா ஒரு சிப்டுக்கு ஓரு வண்டி குறைஞ்சது 1000 த்திலேர்ந்து 1500 வரைக்கும் டிக்கெட் அடிக்குது. இன்னா சொல்ல வர்றேன்னு புரியுதா? ரெண்டு வண்டி ஓட வேண்டிய ரூட்டுக்கு ஒரு வண்டி தான் ஓடுது. இத நான் மட்டும் சொல்லலை, அசோக் லேலண்டு கம்பெனிகாரனே மாநகர போக்குவரத்து கழகத்தை வச்சி கேஸ் ஸ்டடி பண்ணிருக்கான். நாங்க ஒரு ஆறு மாசம் முன்னே அவங்க பேக்டரிக்கு ட்ரெயினிங் போயிருந்தப்போ சொன்னான்”
“நீங்க சொல்றதை பார்த்தா எந்த கம்பெனி வண்டியா இருந்தாலும் பிரச்சினை தானே?”
”நான் சொன்னது பொதுவான நெலமை. இதுல லைலேண்டு வண்டி கொஞ்சம் தாக்கு பிடிச்சி ஓடும். டாடா வண்டிங்க சுத்த வேஸ்ட்”
“எப்படி சொல்றீங்க?”
”லைலேண்டு வண்டியா இருந்தா 50,000 கிலோமீட்டருக்கு ஒரு தபா புல் மெயிண்டனன்ஸ் சர்வீஸ் செய்தாலே போதும். டாடா வண்டியா இருந்தா 8,000 கிலோ மீட்டருக்கு ஒரு வாட்டி செய்யனும். அது மட்டுமில்லாம, லைலேண்டு வண்டி சர்வீஸ் பன்றதுக்கு ஈஸி. உள்ற இருக்கற ஸ்பேரெல்லாம் சுலுவா கழட்டி மாட்டிறலாம். டாடா வண்டின்னா ஒரு ஸ்பேரை கழட்டறதுக்கு தொட்டு தொட்டு எல்லா எழவையும் உருவிப் போடணும்.
அதுவுமில்லாம அவன் வண்டிக்கு ஸ்பேர் கிடைக்கறதும் கஷ்டம். அவனோட டிப்போ பூந்தமல்லில இருக்கு. எதுனா வோணும்னா அங்க ஓடனும். லைலேண்டு வண்டியோட ஸ்பேரெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி பத்த வச்சி அட்ஜஸ்ட் பண்ணி கொஞ்ச நாளைக்கு ஓட்டலாம். டாடா வண்டின்னா போச்சின்னா மாத்தியே தான் ஆகணும்”
“அப்புறம் ஏன் அதை வாங்கறாங்க?”
”அதை நான் எப்படி கேட்க முடியும்? செண்ட்ரல் கெவர்மெண்டு ஸ்கீம்ல வர்ற வண்டி எல்லாமே டாடா வண்டியா தான் இருக்கு”
“நீங்க சொல்ற வியாக்யானம் எல்லாமே உங்க பொறுப்பை கை கழுவறா மாதிரியே இருக்கே. நீங்க சொல்றதை வச்சி பார்த்தா இங்கே எல்லா பேருந்துமே ஓட்டை உடைசலா தான் இருக்கும். அதுக்கு ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு இல்லே அர்த்தம் வருது? சில பேரு அதனால தான் தனியார் கிட்டே பேருந்து சேவையை ஒப்படைச்சிடலாம்னு சொல்றாங்க”
”இருப்பா இரு.. சொம்மா அடுக்கிக்கினே போவாதே. தனியாரு வேணும்ன்னு சொல்றவனை இங்கே அனுப்பு. என் ப்ரெண்டு தான் கே.பி.என் டிப்போல வேலை செய்யறான். பேச வைக்கிறேன். அத்தினி வண்டிலயும் எதுனா ஒரு பிரச்சினையோட தான் ஓட்றான். என்னின்னு எது புட்டுக்கும்னே சொல்ல முடியாது. பெங்களூர் வண்டி ஒண்ணு பத்தி எரிஞ்சி செத்து போனாங்களே அது தனியாரு வண்டி தானே? பச்சமுத்து மாதியான ஆளுங்களுக்கெல்லாம் துட்டு தான் தான் சார் எல்லாமே.. மத்தபடி நீ சொகுசா போகனும்னு அவனுக்கு ஆசையெல்லாம் இல்லே.
ஒரு வண்டிக்கு இத்தினி இன்வெஸ்ட்மெண்டுன்னா அதிலேர்ந்து எத்தினி துட்டு உருவ முடியும்னு தான் பார்ப்பான்.. போட்ட காசுக்கு மேல எடுக்க என்ன வேணும்னாலும் செய்வான்.. அவன் வண்டியெல்லாம் வெளியே பார்க்க தான் சார் ஷோவா வச்சிருக்கான்”
”அவனை விடுங்க… உங்க துறையை ஒழுங்கா செயல்பட வைக்க வேற வழியே இல்லையா?”
”ஏன் சார் இல்லை. இருக்கு சார்”
“அப்ப முதல்ல அதை சொல்லுங்க”
”டிபார்ட்மெண்ட்ல என்னா பிரச்சினை அதுக்கு என்னா செஞ்சு எப்டி சரி பண்ணலாம்ன்னு யாருக்கு தெரியுமோ அவங்க சொல்றாபடி நிர்வாகம் நடந்தாலே போதும் சார்”
“புரியறா மாதிரி சொல்லுங்கண்ணே”
“இப்ப ஒரு வண்டியோட கண்டக்டர் அதிகமா கலெக்சன் காட்றாரு. இன்னொரு வண்டியோட கண்டக்டர் கம்மியா கலெக்சன் காட்றாரு. ஒரு ரூட்ல 15,000 கலெக்சன் ஆகுது. இன்னொரு ரூட்ல ஆயிரம் ரூபா தான் கலெக்சன் ஆகுது. இப்ப ஒழுங்கான நிர்வாகம்னா என்னா செய்யணும்?”
“……”
”நல்லா கலெக்சன் காட்ற கண்டக்டர்களுக்கும் மற்றவங்களுக்கும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யணும். எந்த ரூட்ல போட்டாலும் நல்லா கலெக்சன் காட்ற திறமை இருக்கிற கண்டக்டர்களை வச்சி குறைவா கலெக்சன் ஆகிற ரூட்டை ஆய்வு செய்யணும். அந்த ரூட்ல சேர் ஆட்டோ ஓடுதா, அங்கே ஸ்டூடன்ஸ் அதிகமா, ஆபீஸ் போறவங்க அதிகமா, கூலி வேலை செய்யறவங்க அதிகமா, பேக்டரிக்கு போறவன் அதிகமா அப்படின்னு விவரமா பார்த்து எந்த நேரத்துல வண்டி எடுக்கணும்,
எத்தனை வண்டி விடணும் அப்படின்னு அவங்க சொல்றதை நிர்வாகம் அமுல் படுத்தணும். ஏன்னா ஒரு ரூட்டை பத்தி அந்த ரூட்ல தினமும் ஓடிகிட்டு இருக்கிற டிரைவர் கண்டக்டர்களுக்குத் தான் தெரிஞ்சிருக்கும். மாணவர்கள் அதிகமானா குறிப்பிட்ட நேரத்திலயும், பேக்டரி ஒர்க்கர் அதிகம்னா குறிப்பிட்ட நேரத்திலயும் எடுத்தா தான் சரியா கலெக்சன் ஆகும்”
”அதே மாதிரி, ஒரு அளவுக்கு மேலே கலெக்சன் ஆகிற ரூட்டா இருந்தா புதுசா ஒரு வண்டிய அந்த ரூட்ல விடலாம். கல்லா கட்றதை மட்டும் பாத்தாலும் பிரச்சினை தான் வரும்.
ஒண்ணு, பேசஞ்சர் இத்தனை நெரிசல்ல போகனுமான்னு ஆட்டோவுல போவான் அப்படி இல்லேன்னா ஓவர் லோடு அடிச்சி வண்டி கண்டமாகும். அதுவுமில்லாம லோடு கம்மியா இருக்கேன்னு ஒரு குறிப்பிட்ட ரூட்ல வண்டிய நிப்பாட்டவும் முடியாதில்லையா?”
“வண்டி மெயிண்டனன்ஸ் எடுத்திகிட்டீங்கன்னா.. இப்ப என்னா நடக்குது??? ஒரு வண்டியோட கண்டக்டரும் டிரைவரும் எதுனா ரிப்பேருன்னா மெயிண்டனன்ஸ் ரெஜிஸ்டருல எண்ட்ரி போட்டு ஷெட்டுல கொண்டாந்து விட்டுட்டு போயிடுறாங்க. எங்க மெக்கானிக்குங்களுக்கு அந்த வண்டி எந்த ரூட்ல ஓடுது..
அந்த ரூட்ல ரோடு ஓட்டையா, ட்ராபிக் அதிகமா எதுவும் தெரியாது. இதே ஒரு ரூட்டை பத்தி கண்டக்டர்களும் டிரைவர்களும் மெக்கானிக்கும் கலந்து பேசினா ஒரு வண்டிக்கு அடுத்த ஆறு மாசத்துக்கு என்னென்ன பிரச்சினை வரும்னு நாங்களே புட்டு புட்டு வச்சிருவோம். அதுக்கு தகுந்தா மாதிரி வண்டிய சர்வீஸ் பண்ணிடலாம். கலெக்சன் அதிகமா காட்டுற ரூட்ல ஓடற வண்டிங்களை நாங்களே ஆய்வு செஞ்சு நல்ல ஸ்பேர் பார்ட்ஸ் போட்டு நல்லா கண்டிசனா வச்சிருப்போம். எந்த வண்டிகள்ல எந்த மாதிரி பிரச்சினை வரும், எந்த சீசன்ல எந்த ஸ்பேர் போகும், எந்த ஸ்பேர் அடிக்கடி போகும்னு எங்களுக்குத் தான் சார் தெரியும். நாங்களே தேவையான ஸ்பேரை தேவையான அளவுக்கு வாங்கி ஸ்டாக் வச்சிக்க போறோம்..”
”ஏங்க அப்ப அதிகாரிகளை என்ன செய்ய சொல்றீங்க?”
”ஆணியே புடுங்க வேணாம்கிறேன். அதிகாரிங்களே தேவையில்லை சார்… இன்னாத்துக்குன்னு கேக்கறேன். ஒவ்வொத்தனுக்கும் கெவருமெண்டுலேர்ந்து ஏ.சி ரூமு குடுத்திருக்கான்…அது போக தனி ஜீப்பு, அதுக்கு டீசலு, டிரைவரு, பஞ்சப்படி, பயணப்படி… இப்படி ஏகப்பட்ட சலுகை. ரெவின்யூக்கு தனி ஜி.எம் ஒருத்தனாம்.. பைனான்ஸ்க்கு தனி ஜி.எம் ஒருத்தனாம்…
எந்த ஊர்லயாவது ரெட்டை மாட்டு வண்டிங்கறதுக்காக ரெண்டாளு ஓட்டி பாத்திருக்கீங்களா சார்? அரசு போக்குவரத்து துறை ஆபீசுக்கு போங்க… சைடுல வீங்குன எவனைக் கேட்டாலும் ஜி.எம்னு சொல்வான்… இன்னாத்துக்குன்னு கேக்கறேன்… நாங்க தெருத் தெருவா அலைஞ்சி… வெயில்ல கஷ்டப்பட்டு.. பப்ளிக் கிட்ட பாட்டு வாங்கி சம்பாதிச்சி கொண்டாந்தா.. இவனுங்க எங்க காசைத் தின்னுட்டு எங்களுக்கே மெமோ குடுக்கறானுங்க. இந்த அதிகாரிங்க எதுக்குன்னு கேக்கறேன்..? எங்க கிட்ட குடுத்தா நாங்களே அருமையா நிர்வாகத்தை நடத்துவோமே சார்?”
”வேற எதுனா சொல்றீங்களா..?”
“நேரமாச்சு பிரதர்.. உள்ற போகனும். பார்க்கலாம் வர்ட்டா…?”