தாது மணல் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது தொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
கிராமப்புறங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 நாள் அவகாசம் அளித்திருப்பது போதுமானதாக இல்லை. குக்கிராமங்களிலும் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையின் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. நாட்டின் கனிமவளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.
தாது மணல் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு விசாரணையில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ எதிராகப் போராட புதிய தமிழகம் கட்சி தயங்காது. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவை நியமித்து அரசு விசாரணை நடத்துவது மட்டுமல்லாது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தாது மணல் குவாரிகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியைப் போன்ற ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து கடலோரக் கிராமங்களில் ஆய்வு செய்யவுள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வரும் 29-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
தேர்தல் ஆதரவு: முடிவு அறிவிக்க தாமதம் ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக கிருஷ்ணசாமி கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் கூடுவதாக அறிவித்த கூட்டமும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியது:
தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல புதிய தமிழகம். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மக்களைத் திரட்டி மாநாடு நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட சக்தியும் இல்லை. மக்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி பணியாற்றுகிறோம். ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தொடர்பாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அறிவிக்காமல் உள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
No comments:
Post a Comment