கருப்பியைக் கொன்ற போலிஸ் - சிரமப்பட்டு வந்த நீதி!
நான்கு போலீஸார் கருப்பியை மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.
கொட்டடிக் கொலைகள் சாதாரணமாக நடக்கும் தமிழகத்தில், 10 வருடங்களுக்கு முன் பாசிச ஜெயாவின் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண், போலீஸாரால் லாக்கப்பில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை கட்டவிழ்க்கும் அரசு மற்றும் ஆதிக்க சாதியினர் சார்பில் ஏவல் செய்வது போலீஸ் துறையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. தங்களிடம் சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியான அடக்கு முறையையும், தாக்குதலையும், போலீஸ்காரர்கள் செலுத்தாமல் விடுவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.
‘தி இந்து’ நாளேட்டில் வெளியான முன்னாள் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனின் தலைவர் டாக்டர். வசந்தி தேவியின் கட்டுரையை தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
48 வயது நிரம்பிய கருப்பி பரமக்குடியை சேர்ந்தவர். அருந்ததியர் சமூகப் பெண்ணான அவர் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்தார். 2002 ஆம் ஆண்டு, பணியிடத்தில் தங்கச் சங்கிலியை திருடியதாக வீட்டு உரிமையாளர்களால் பழி சுமத்தப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
காவல் நிலையத்தில் கருப்பி ஆறு நாட்கள் போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளானார். இறுதியில் அவரது உயிரற்ற சடலம், டிசம்பர் 1 2002 அன்று காவல் நிலையத்தின் பிற்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது. நடந்தது தற்கொலை என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
காவலில் இருக்கும் ஒருவர் தப்பித்து சென்று தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்லும் கதை நடைமுறையில் சாத்தியமற்றது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. சம்பந்தப்பட்ட சாட்சிகளை போலீஸார் அச்சுறுத்துவதாக தெரிவித்து, இவ்வழக்கில் தலையிடுமாறு தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனுக்கு பரிந்துரை செய்தன.
அப்போது கமிஷனில் தலைமை பதவியில் இருந்த வசந்தி தேவி இவ்வழக்கை விசாரித்தார். முதலில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு, கருப்பியின் குடும்பத்தாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.
சம்பவம் நடந்த காவல் நிலையத்தை பார்வையிட்டவருக்கு, கருப்பியால் தப்பித்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தெளிவாகியது. கருப்பியின் குடும்பத்தாரிடம் நடந்த விசாரணையில் அவர்கள் எல்லாரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும் விளங்கியது.
அவர்களது வாக்குமூலங்கள், ‘கருப்பி திருடியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாள்’ என்ற போலீஸின் கதையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தன. இக்கொலைக்கு போலீஸ் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று அவர்கள் உறுதியாக பதிவு செய்துள்ளனர்.
பயத்தால் தான் இவ்வாறு பேசுகிறார்கள் என்று உணர்ந்த வசந்தி தேவி, தன்னை நம்பி உண்மையை வெளியிடலாம் என்று கூறியும், அவர்களது பயம் குறையவில்லை. நடந்தது என்ன என்பதை இனியும் அறிய முடியாது என்று நம்பிக்கை இழந்து அங்கிருந்து புறப்பட இருந்த வசந்தி தேவிக்கு இறுதியில் திருப்பு முனையாக ஒரு ஆதாரம் கிடைத்தது.
கருப்பியின் நாத்தனார் கணவரான கிறிஸ்து தாஸ் என்பவர் இம்மரணத்தின் காரணத்தை மூடிமறைத்து இருந்த இரகசியத் திரையை விலக்கினார். “அம்மா என்னையும் என் பிள்ளைகளையும் தயவு புரிந்து காப்பாத்துங்க, நாங்க பெரிய ஆபத்திலே மாட்டியிருக்கோம்” என்று கூறி வசந்தி தேவியின் காலில் விழுந்து கதறியிருக்கிறார் கிறிஸ்து தாஸ். ‘உண்மையை நான் சொல்லியே ஆகணும், இல்லேனா ஈமத்தீயிலே என் நெஞ்சு வேகாது’ என்று சொல்லி நடந்ததை கூறியிருக்கிறார்.
நவம்பர் 26, 2002 அன்று இரவு கிறிஸ்து தாஸையும் அவருடைய மனைவியையும், கருப்பியின் மகள் மற்றும் மருமகன் ஆறுமுகத்தையும் பரமக்குடி போலீஸார் காவல் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளனர். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கருப்பி திருடியதாக போலீஸார் அவர்களிடம் சொல்லியிருக்கின்றனர. அதன் பிறகு கிறிஸ்து தாஸின் ஆடைகளைக் களைந்து, கைகளில் விலங்கிட்டு, கால்களை மேசையில் கட்டி வைத்து விடியும்வரை உடல் ரீதியான தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.
செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கத்தான், கருப்பியின் உறவினர்களை பிடித்துவந்து, அவளுடைய கண்முன்னரே போலீஸார் அடித்துள்ளனர் என்பதை உணர்ந்தார் கிறிஸ்து தாஸ்.
மூன்று நாட்களும், கருப்பியை நான்கு போலீஸார், மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். தான் அப்பாவி என்று மன்றாடிய அப்பெண்ணின் கதறல்களுக்கு செவிசாய்க்காமல், பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.
மூன்று நாட்கள் கழித்து கிறிஸ்து தாஸ் குடும்பத்தை போலீஸார் விடுவித்தனர்.
டிசம்பர் 1 2002 அன்று, இறந்த பெண் ஒருவரின் உடல் காவல் நிலையத்தின் பின் கிடைத்துள்ளது என்றும், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்ட கிறிஸ்து தாஸ் அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் கருப்பியை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.
வசந்தி தேவியின் விசாரணை துவங்குவதற்கு முன்பே, போலீஸார் கருப்பியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர் என்ற உண்மையையும் கூறினார் கிறிஸ்து தாஸ்.
விவரங்களுடன் சென்னைக்கு திரும்பிய வசந்தி தேவி கருப்பி வழக்கின் முக்கிய ஆவணங்களான, பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை இவற்றை சேகரித்தார். சம்பவத்திற்கு பிறகு நடந்த சப் கலெக்டர் விசாரணையில், ஐந்து போலீஸ் அதிகாரிகளும், ஒரு இன்ஸ்பெக்டரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை ஆகிய ஆவணங்களை சென்னை அரசு மருத்துவமனையின் மருத்துவ தடயவியல் துறை தலைவரின் கருத்துக்காக அனுப்பி வைத்தார்.
தடயவியல் துறைத் தலைவர் கீழ்க்காணும் முக்கிய குறிப்புகளை அனுப்பினார்.
• மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது.
• உடல் முழுவதும் பல இடங்களில் கன்றிப்போன காயங்கள் உள்ளன.
• இறப்பதற்கு 1-3 நாட்கள் முன்பு வரை கூர்மையற்ற ஆயுதத்தின் மூலம் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார்.
• இடது மற்றும் வலது பக்கங்களிலிருந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
• வலது நெற்றியில் உள்ள உறைந்துப்போன காயம் தான் அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக ஏற்பட்டுள்ள கடைசி காயமாகும்.
கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இவ்வழக்கை சி.பி.ஐ. அல்லது மாநில கிரைம் பிரான்ச் மூலமாக, விசாரிக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும் தலைமை செயலருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். கடிதங்களுக்கும் நினைவூட்டல்களுக்கும் அரசாங்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன் சட்டப்படியான அதிகாரங்கள் இல்லாத அமைப்பாக இருந்ததால் வழக்கின் சாட்சிகளை அழைத்து விசாரிக்கும் உரிமை அதற்கு கிடையாது. ஆகவே, வசந்தி தேவி, தேசிய பெண்கள் கமிஷன் தலைவராக இருந்த பூர்ணிமா அத்வானியை தொடர்பு கொண்டார். தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன்கள் சேர்ந்து, அக்டோபர் 28 2003 அன்று கூட்டு பொது விசாரணையை மதுரையில் நடத்தினர்.
விசாரணைக்கு கருப்பியின் உறவினர்களும், பல சாட்சிகளும் பரமக்குடி சப்-கலெக்டரும், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களும் அழைக்கப்பட்டனர். கருப்பி, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகித்தான் இறந்திருக்கிறார் என்பது மேலும் தெளிவானது. நடந்து தற்கொலை அல்ல போலீஸாரால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதியாகியது.
கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், கருப்பியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 2 லட்சமும், கொடுமைகளுக்கு ஆளான ஆறுமுகம் மற்றும் கிறிஸ்து தாஸ் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சமும், நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், வசந்தி தேவியின் பணிக்காலம் முடிவடைந்த மார்ச் 2005 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் அப்போது மாநில மகளிர் ஆணையத்தின் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் இவ்வழக்கை பரமக்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சி.பி.ஐ பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவினை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்தார். “பாதிக்கப்பட்ட பெண், போலீஸாரால் மனிதத் தன்மையற்ற விதத்தில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றும் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கின் புலனாய்வை தன்னிச்சையான அமைப்பு ஒன்று செய்யவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.
5 வருடங்களுக்கு பிறகு, சென்ற பிப்ரவரி 14ம் தேதி அமர்வு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. சதாசிவம் கருப்பியை கொன்ற எட்டு போலீஸ்காரர்களில் 5 பேருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனையும் இன்னும் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.
லாக்கப் கொலையை தற்கொலை என்று சித்தரித்து கருப்பியின் உடலை மின் கம்பத்தில் தூக்கிலிட்ட காவல் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த இன்ஸ்பெக்டர் சாஹில் ஹமீதுக்கு ரூ 1 லட்சம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
சட்டத்தின் காவலர்களான போலீஸ்காரர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஆதரவுமற்ற ஒரு பெண்ணை படுகொலை செய்திருக்கின்றனர். அவரது குடும்பத்தையும் சித்திரவதை செய்திருக்கின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகளும் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இதுதான் நமது நீதி நிர்வாக அமைப்பின் லட்சணம்.
No comments:
Post a Comment