Sunday, November 29, 2015

Late A. S. Ponnammal, Congress Party



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த ஏ.எஸ்.பொன்னம்மாள் (88) காலமானார்

நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ஏழு முறை உறுப்பினராக இந்த பழம்பெரும் காங்கிரஸ் அரசியல் பிரமுகர் ஏ.எஸ்.பொன்னம்மாள் (வயது 88) அவர்கள் 24-11-2015 அன்று காலமானார் .

தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் ம.தங்கராஜ் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

15 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற “அக்கா” பொன்னம்மாள் ஒருமுறை அவரது இலத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் சொன்ன சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

“அக்கா” பொன்னம்மாள் குடும்பம் காலாடி வகையறா , நிலக்கோட்டை அருகில் உள்ள அழகம்பட்டி கிராமத்தில் தலைவராகவும் இருந்தவர். இவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான குளம் இருந்துள்ளது. அதை ஆடு, மாடுகள் நீர் அருந்த பொது மக்கள் தேவைக்கு பயன் படுத்த முடிவு செய்து இவருடைய அப்பா அப்பொழுது திண்டுக்கல் ஆட்சியராக இருந்த திரு.சேஷன் அவர்களிடம் பேசி அரசுக்கு சொந்தமாக மாற்றச் சொல்லி ஊர் பொது பயன்பாட்டிற்கு கொடுத்த குடும்பம்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து நெடுமாறன், பொன்னம்மாள் விலகி இருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் தன் இல்லத்திற்கு பொன்னம்மாள் அவர்களை அழைத்து தன் மனைவி கையில் விருந்து கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விலகி இருக்கும் நீங்கள் ஏன் அ.தி.மு.கவில் இணையக் கூடாது என்று கேட்டதற்கு நான் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்தவள் , என்னால் அரசியல் சூழலுக்காக அ.தி.மு.கவில் சேர முடியாது என்று சொல்லி மறுத்து விட்டார். எம்.ஜி.ஆர் இதை புரிந்து கொண்டு வெங்கட்ராமன் அவர்களிடம் பேசி இந்திராகாந்தியிடம் தெரியபடுத்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க சொல்லியுள்ளார். காங்கிரஸ் கட்சி இவரை டில்லிக்கு அழைத்து இந்திராகாந்தி அவர்கள் முன்னிலையில் மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் சேர ஏற்பாடு செய்துள்ளார். இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் பண்பு, பொன்னம்மாள் அரசியல் நிலைபாட்டில் இருந்த உறுதி வெளிப்படுகிறது.

இப்படி எந்த இடத்திலும் பணத்திற்காக விலை போகாத , அரசியல் அதிகாரத்திற்காக மாறாத உறுதியான மன நிலையுடன் வாழ்ந்தவர். இப்படி பாராட்டத்தக்க வகையில் வாழ்ந்த பொன்னம்மாள் அவர்களின் அரசியல் வாழ்க்கை எளிமையை இந்த நாளில் நினைவு கொள்வோம்.




Saturday, April 25, 2015

கீழ்வெண்மணி - ராமையாவின் குடிசை


.ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.
தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.

01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்குப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.

04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.

05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.

06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.

07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘குருதிப்புனல்’ நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.

08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.

09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.

10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுடுவைப் பழி வாங்குகிறான்.

11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.

14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.

16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.

கீழ்வெண்மணி குறித்து ஞானக்கூத்தன் 1969ல் எழுதிய கவிதை ஒன்று:

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின
புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்
குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்
இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க


தமிழகத்தில் தேவேந்திரகுலவேளாளர்களின் நிலை


தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் தலித்துகளில்உரிமைகள் ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தியா விடுதலைபெற்று 58 ஆண்டுகள் ஆன பின்னரும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்துவருகிறார்கள்.

நாகப்பட்டினம் அருகே கீழவெண்மணி என்னும் கிராமத்தில் 1960களில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் விவசாய தொழிலாளர்கள் கடும் அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது. அவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டபோது தலித் பிஞ்சுகள் கருகி சாம்பலாகியிருந்தன.
இந்த சம்பவம் பற்றிய தகவல்களுடன் ஆரம்பிக்கிறது தலித்துகள் பற்றிய டி.என்.கோபாலன் வழங்கும் தொடரும் துயரம் என்னும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம்.


தேவேந்திரகுல வேளாளர் நிலை:
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.

சில காலத்துக்கு முன் தென்மாவட்டங்களில் இடைநிலை சாதியினரான முக்குலத்தோர் என்றழைக்கப்படும் தேவர் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வேளாளருக்கும் இடையே மோதல்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தன.

சாதிக் கொடுமை பற்றி விழிப்புணர்வு அடைந்த தலித் மக்கள் அந்தத் தளையிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிகளை எடுத்தபோது - பொதுவள ஆதாரங்களில் தமக்கும் பங்கு உண்டு என்று ஆதிக்க சாதியினரிடம் உரிமைகோரியபோது இந்த மோதல்கள் எழுந்தன.

1995ல் திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக பொலிசார் மோசமாக நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் பற்றியும், தென் மாவட்டங்களில் தற்சமயம் நிலைமை எப்படி மாறி வந்துள்ளது என்பது பற்றியும் இரண்டாம் பாகம் ஆராய்கிறது.


ஆதி திராவிடர் நிலை:
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1940களிலும், ஐம்பதுகளிலும், பலரும் போற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில் நடந்த பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஆதிதிராவிடர் நிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிதருப்பதாகக் கருதப்படும் அங்கேயும் ஓரே அவலம்.

பறையர் அல்லது ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் தலித் பிரிவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மாநிலத்தின் மக்கட்தொகையில் 19 சதம் தலித்துகள் என்றால் ஆதிதிராவிடர்கள் அதில் 70 சதம் இருப்பார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க அளவு கல்வியறிவு பெற்ற சமூகமாக அது கருதப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற கூலிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடர்வதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1997ஆம் ஆண்டு மதுரை அருகே உள்ள மேலவளவில் ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த அதன் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டனர். எட்டாண்டுகள் பின்னரும் அங்கே தலித்துகள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவே கூறுகின்றனர். மேல்சாதியினரோ பிரச்சினை எதுவுமே இல்லை, எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது என்றனர். வடமாவட்டங்களிலும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது.

பெரம்பலூர் பகுதியில் பருககல் கிராமத்தில் நாம் ஒரு தேனீர்கடையில் இரண்டுவித குவளைகளைப் பார்த்தோம். ஏன் அப்படி எனக் கேட்டபோது கடை உரிமையாளர் பதிலளிக்கமறுத்துவிட்டார். அங்கே இருந்த சில வன்னியர்கள் பாகுபாடு எதுவும் இல்லை என்றனர்.

அண்டைமாவட்டமான கடலூரிலோ சிறுத்த தொண்டமாதேவி என்ற கிராமத்தில் பாதுகாப்பற்ற சில ஆதிதிராவிடவீட்டுப் பெண்களை மேல்சாதியினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக செய்திகள் இரண்டாண்டுகளுக்கு முன் வந்தன. தலித் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின் அங்கே நிலைமை கட்டுக்குள் வந்தது.

வன்னியர்களின் பிரதிநிதியாக கருதப்படம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து தமிழ்பாதுகாப்பு இயக்கம் இப்போது நடத்திவருவதால் வடமாவட்டங்களில் பதட்டம் சற்று தணிந்திருப்பதாக கருதப்படுகிறது.


அருந்ததியரின் அவலம்:
கிராமப்புறங்களில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாது, ஜீவிப்பதற்கு முற்றிலுமாக நில உடைமையாளர்களை சார்ந்து நிற்கிறார்கள் அருந்ததியர். நகர்புறங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளிகளாகவும் , மற்றும் துப்புரவுப் பணியாளர்களாகவும் நாம் இவர்களை சந்திக்கலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் குருசாமி பல்கலைக்கழக வளாகத்திலேயே பிரச்சினை இருப்பதாக கூறினார்.

கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும்கூட கம்பம் நகர அருந்ததியர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணன் புகார் கூறினார். ஆனால் தேவேந்திரகுலவேளாளர் தலைவர்களில் ஒருவரான Late. பசுபதி பாண்டியனோ அப்படிஒரு சிக்கல் இருப்பதாகவே தன் கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.

புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னமும் ஒருபடிமேலே போய் தேவேந்திரகுலத்தவர்க்கும், அருந்ததியருக்கும் இடையே பிரச்சினை இருப்பது எனக்கூறுவதே மேல்சாதியினரின் சதி என்கிறார். தேனிமாவட்டத்தில் ஒரு தலித் ஆர்வலர் அருந்ததியர் பின் தங்கியிருப்பதற்காகன காரணம் அவர்களே என்றார்.

துப்புரவுப்பணியாளர்களாகப் பணியாற்றும் ஆதி ஆந்திரர்கள் என்பவர்களும் அருந்ததியர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். இவர்கள் நிலை இன்னமும் பரிதாபத்திற்குரியதாகத்தான் இருக்கிறது.
சென்னையைச்சேர்ந்த தொழிற்சங்கத்தலைவர் புருஷோத்தமன் மலம் அள்ளும் பழக்கம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்கிறார்.


மதமாற்றம் பலன் தருமா?
தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது.

இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்றனர்.
பின்னர் கிறித்தவத்தில் நீதிகிடைக்காத தலித் மக்கள் இஸ்லாத்தை நாடத்துவங்கினர். இப்படியான மதமாற்றங்கள் தலித்துகளின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்ததா, அமையுமா என்பதை இந்தப் பகுதியில் ஆராய்கிறார் எமது டி.என். கோபாலன்.


பொருளாதாரம்:
சாதி இறுக்கங்களுக்கு அப்பால் தலித் மக்களின் பிந்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களது வறுமையும் எழுத்தறிவின்மையுந்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மக்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். இவர்களது உடமைகளும் மிகவும் குறைவானவையே.

இந்த நிலைகுறித்தும், இவற்றை சமூகம் எவ்வாறு கையாழுகிறது என்பது குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார் டி.என்.கோபாலன்.


அரசியல் அதிகாரத்தை நோக்கி:
தலித்துகளின் நிலை குறித்து ஆராயும் இந்தப்பெட்டகத்தின் ஏழாவது பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளில் தலித் இனத்தைச்சேர்ந்த தலைவர்களுக்கு முக்கிய இடம் தரப்படுவதில்லை அவர்கள் வெறும் காட்சிப்பொருளாகத்தான் வைக்கப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது.

தலித்துகள் அதிகார மையங்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

தமிழ்த் தேசியம் குறித்த அணுகுமுறையில் தலித் அமைப்புகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆனால் , விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த விஷயத்தில் தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமல்ல தலித்துகளை உள்ளடக்கிய தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதே என்று கூறுகிறார்கள்.

தலித் கட்சிகள் தலித்துகளை அணி திரட்டுவது என்பது அரசியல் ரீதியானதாக இல்லாமல் தனிநபர்களைச் சுற்றியதாகவே அமைந்திருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை என்கிறார் அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ்.


http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml




'சீயான்' விக்ரம் - ஒரு அலசல்


விக்ரம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 25 வருடங்களைக் கடந்துவிட்டார். ஜனவரியில் வெளியான 'ஐ' விக்ரமின் 50-வது படம்.



எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய்- அஜித், தனுஷ் - சிம்பு, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என்ற வரிசையில் விக்ரமுக்குப் போட்டி யார்? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. மேம்போக்காக சூர்யா என்றோ, பிற நடிகர்களையோ நாம் ஒப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்காது. அப்படி மற்ற நடிகர்களோடு விக்ரமை ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள், நிச்சயம் விக்ரம் கடந்து வந்த பாதையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

விக்ரம் கடந்து வந்த பாதை:
லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த விக்ரம் 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். ஸ்ரீதர் இயக்கத்தில் 'தந்துவிட்டேன் என்னை', பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் 'மீரா', எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 'காவல் கீதம்' ஆகிய படங்களில் நடித்தும் விக்ரம் என்ற நடிகனை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த விக்ரம் டப்பிங் கலைஞராகக் கூட தன்னை தகவமைத்துக்கொண்டார். 'அமராவதி' படத்தில் அஜித்துக்கும், 'காதலன்', 'மின்சார கனவு' படங்களில் பிரபுதேவாவுக்கும், 'காதல் தேசம்', 'விஐபி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களில் அப்பாஸூக்கும் குரல் கொடுத்தவர் விக்ரம்தான்.

பொதுவாக சினிமாவில் மிகப் பெரிய திருப்புமுனையோ, ஒரு நடிகன் மீது கவன ஈர்ப்பு குவிவதோ எப்போது நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. விக்ரமுக்கு அந்த கவன ஈர்ப்பு கிடைக்க ஒன்பது வருடங்கள் ஆனது. 1990ல் ஹீரோவாக அறிமுகமான விக்ரம், 1999-ல் வெளியான 'சேது' படத்தின் மூலம்தான் கதாநாயகனுக்கான அங்கீகாரம் கிடைத்தது. கல்லூரி இளைஞனாகவும், மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்திலும் விக்ரம் தன் அசாத்திய நடிப்பை வழங்கினார்.



'சீயான்' விக்ரம்:
'அதிர்ஷ்டம் அல்ல. தன்னம்பிக்கை மட்டுமே கைகொடுக்கும்' என்று சினிமாவிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததால்தான், 'சேது'வுக்குப் பிறகு 'சீயான்' விக்ரமுக்கான வாய்ப்பு வெளிச்சங்கள் பிறந்தன.

'தில்', 'காசி', 'ஜெமினி', 'தூள்', 'சாமி', 'பிதாமகன்', 'அந்நியன்' என்று தன் விக்ரம் கமர்ஷியல் விஸ்வரூபம் எடுத்தார்.

தரணியின் 'தில்' கமர்ஷியல் ஹீரோவாவுக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்த 'காசி' படத்தை தமிழ் ரசிக குடும்பங்கள் கொண்டாடின.

'ஜெமினி', 'தூள்', 'சாமி' படங்கள் அதிரடியான விக்ரமை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

வெட்டியான் சிந்தனாக பிதாமகனில் விக்ரம் நடித்தது மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. சூர்யா காமெடி கதாபாத்திரமகாவே மனதில் நிற்க, விக்ரம் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

விக்ரம் ஓடி வருவதும், கோபப்படுவதும், வெறி கொண்டு வில்லனைத் தாக்குவதும் இமை கொட்டாமல் பார்த்தனர். சிறந்த நடிகனுக்கான தேசிய விருதை விக்ரம் பெற்றார்.

பரிசோதனைக் கூடம்
'அந்நியன்', 'தெய்வத்திருமகள்', 'ஐ' என்று தன் அடுத்த கட்ட பாய்ச்சலிலும் நடிகனாக தன்னை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

'சாமுராய்', 'மஜா', 'பீமா', 'தாண்டவம்', 'ராவணன்' படங்கள் விக்ரமுக்கு மிகப்பெரிய சறுக்கல்களாக அமைந்தன. ஆனாலும், தன்னை ஒரு பரிசோதனைக் கூடமாக பயன்படுத்திக்கொள்வதில் விக்ரம் தயக்கம் காட்டியதே இல்லை. அதனால் தான், 'ஐ' படத்தில் மாறுபட்ட உடலமைப்புகளில் விக்ரம் வித்தியாசம் காட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

தீராக் காதல்
ஒரு நடிகன் இரண்டு நிலைகளில் தன் நடிப்புத் திறமையை இந்த உலகுக்கு பரிபூரணமாக வெளிப்படுத்த நினைக்கிறான். அது நடிப்பு என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறுவது. உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவது. இந்த இரண்டு நிலைகளிலும் விக்ரம் அசாதாரணமாக கடந்துவந்திருக்கிறார். அதற்குக் காரணம் சினிமா மீது விக்ரமுக்கு இருக்கும் தீராக் காதல்.

'தெய்வத் திருமகள்' படத்தில் எனக்கு பாப்பா பொறக்கப் போகுது என்று இன்னொரு குழந்தையாக மாறி குதூகலத்துடன் சொல்லும்போதும், நிலா வைப் பார்த்து உருக்கமுடன் பேசும் போதும், கோர்ட் காட்சியில் நிலாவுடன் சைகையில் பேசும் போதும் கிருஷ்ணா என்ற கதாபாத்திரமாகவே மாறி நம்மை கலங்கடித்துவிடுகிறார்.

உடலை வருத்திக்கொண்டு நடிப்பதிலும் விக்ரம் தனித்துவம்தான். 'அந்நியன்' திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் , விக்ரமை கொடூரமாக சித்திரவதை செய்யும் காட்சிகளில் அம்பி அந்நியனாக மாறுவது முக்கியமான காட்சி. 'ஐ' படத்தில் பாடி பில்டர், மாடல், கூனன் என்று உடலை சிதைத்து விக்ரம் நடித்த விதம் அர்ப்பணிப்பின் உச்சம்.


சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கு விக்ரம் சொல்ல விரும்புவது:
ஈகோ இல்லாத பண்பு: ஹீரோ எப்படி டப்பிங் பேசுவது என்று இல்லாமல் கிடைத்த வேலைகளை செய்தது.
காத்திருத்தல்: அவசரப்படாமல் பொறுமையாகக் காத்திருப்பது.
தீராக் காதல்: விடாமுயற்சியைக் கைவிடாமல் வாய்ப்பு வேட்டை நடத்தியது.
தொழில் பக்தி: கிடைத்த வாய்ப்பை முழுமையாக, உண்மையாக பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் உழைப்பது
அர்ப்பணிப்பு: கதைக்கு, கதாபாத்திரத்துக்கு தேவையானதை செய்ய ரிஸ்க் எடுப்பது.
சவாலை ஏற்றுக்கொள்வது: கதாபாத்திரம் கடினமானதாக இருந்தாலும், அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அதற்குள் ஊடுருவிச் சென்று அதன் தன்மை உணர்ந்து முழுமையாக மாறுவது.

இதனால் தான் பாலா, ஷங்கர், மணிரத்னம், தரணி, ஹரி, லிங்குசாமி , விஜய் என்று வெரைட்டியான இயக்குநர்களின் படங்களில் விக்ரமால் நடிக்க முடிந்தது.
ஓவ்வொரு படத்தின் கதாபாத்திரமும் விக்ரமுக்குப் போட்டிதான். அதனால்தான், சேது, சிந்தன், கிருஷ்ணா, லிங்கேசன் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னை தொடர்ந்து நிரூபிக்கிறார்.

நடிப்பு என்பது நம்மை உணரவைப்பது. இங்கே ஒவ்வொரு நடிகனுக்கும் ஒவ்வொரு மாதிரியான பயிற்சிகள் உள்ளன. மிகச் சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்ப்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். அந்த நேர்த்தியை விக்ரம் கைவரப்பெற்றிருக்கிறார்.

மிகச் சிறந்த நாயகனாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதே விக்ரம் அப்பா வினோத் ராஜின் ஆசை. கடைசிவரை ஒரு துணை நடிகராகவே விக்ரம் அப்பாவால் சினிமாவில் வலம்வர முடிந்தது. அப்பா கனவு கண்டதை விக்ரம் நனவாக்கினார். வெற்றிகரமான ஒரு ஃபெர்பாமிங் நடிகரான விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

விக்ரமின் இந்த வெற்றிப் பயணம் தொடரட்டும்...

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடிகனகாவே பிறக்க ஆசைப்படுகிறாராம் விக்ரம். அப்படியே ஆகக் கடவது என்று நாமும் வாழ்த்துவோம்!

சிவாஜியை பார்த்துருகோம் M.G.ர ஐ பார்த்துருகோம் ! ரஜினி ஐ பார்த்துருகோம் கமல் ஐ பார்த்துருகோம் ! உன்னை போல ஒரு நடிகன் ஐ பார்த்தது இல்லை பா ! படத்தில் வந்த வசனம் கண்டிப்பா நிஜத்திலும் இவருக்கு பொருந்தும் !




DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget